சேலத்தில், மக்களவை தேர்தல் தொடர்பான முதல்கட்ட பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாத 350 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் பணியாற்ற வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர் நிலை 1, நிலை 2, நிலை 3 ஆகிய பணிகளில் பெரும்பாலும் ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு உள்ளனர். இம்மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி முகாம் சேலத்தில் நடந்தது.
கடந்த 24ம் தேதி சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 இடங்களில் முதல்கட்ட தேர்தல் பயிற்சி முகாம் நடந்தது. தேர்தல் பணியில் மொத்தம் 15836 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பயிற்சி முகாமில் பெரும்பான்மையானவர்கள் பங்கேற்ற நிலையில், 350 ஆசிரியர்கள் மட்டும் வரவில்லை.
இதையடுத்து, முதல்கட்ட பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாதது ஏன் என்று விளக்கம் கேட்டு 350 ஆசிரியர்களுக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி ரோகிணி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மருத்துவம் சார்ந்த காரணங்களால் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை என்று கூறுவோர், அதற்குரிய சான்றாவணங்களையும் விளக்க கடிதத்துடன் இணைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment