எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சென்னையில் பணியாற்றும் 5-ல் ஒரு ஆசிரியருக்கு குரல் பாதிப்பு... தீர்வு என்ன?

Friday, April 19, 2019


96 திரைப்படம் பார்த்த எல்லோரும் கடந்த காலத்தை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டிருப்பார்கள். பள்ளியில் உலவித்திரிந்த இடங்கள், பொழுது கழித்த நண்பர்கள், மனதை ஈர்த்த நபர்கள் எல்லோரும் மனக்கண்ணில் வந்துபோவார்கள்.
இப்போது மீண்டும் ஒருமுறை பள்ளியை நோக்கிப் பயணிப்போம், வாருங்கள். உங்கள் கண்களை மூடிக்கொண்டு நீங்கள் படித்த பள்ளியை கண்முன் கொண்டு வாருங்கள். பள்ளிக்கூடத்தில் கேட்ட சத்தங்களை நினைவுபடுத்திப் பாருங்கள்.
`ஓரொண்ணா ஒண்ணு...
ஈரொண்ணா ரெண்டு...
மூவொண்ணா மூணு....'
- இது, காலையில் பள்ளி தொடங்குவதற்குமுன் வாய்ப்பாடு ஒப்புவிக்கும்போது வெளிப்படும் சத்தம்.
அடுத்தது தமிழ்த்தாய் வாழ்த்து.

தேசிய கீதம்...
பெல் சத்தம்... மாணவனின் மிமிக்ரி... கைத்தட்டல்... பி.டி வாத்தியாரின் விசில் சத்தம்...
இந்த ஒலிகளுக்கு நடுவே ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு விருப்பமான ஒருவரின் குரலை நினைவில் கொண்டு வாருங்கள்.
கணீர் குரல், மெல்லிய‌ குரல், மிரளவைக்கும் குரல் என ஒவ்வோர் ஆசிரியரும் நம்மைப் பாராட்டிய, திட்டிய தருணங்கள்... அந்தத் தருணங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம் நினைவுகளைவிட்டு நீங்காதவை. நமக்குப் பாடம் சொல்லித்தர, நம்மை நல்வழிப்படுத்த, நம்மிடம் அன்பு பாராட்ட என வருடம் முழுக்க ஒலிக்கும் அந்தக் குரல்களுக்குச் சொந்தக்காரர்களான அந்த ஆசிரியர்களைப் பற்றி நாம் என்றைக்காவது சிந்தித்ததுண்டா?
 பாடகர்கள் தங்கள் குரலைச் சீராக்க, குரல்வளையைப் பாதுகாக்க அதிக கவனம் எடுப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், கடைசி பெஞ்ச் மாணவனுக்கும் கேட்கும்விதத்தில் குரலை உயர்த்தி, கத்திக் கத்தி பாடம் எடுக்கும் அந்த ஆசிரியர்கள் தொண்டை மற்றும் குரல்வளையைப் பாதுகாக்க முயற்சி எடுத்ததுண்டா, அல்லது நாம்தான் அவர்கள் நலன் பற்றி சிந்தித்திருப்போமா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கும் வகையில் அமைந்துள்ளது `தி ஜர்னல் அஃப் வாய்ஸ்'ஸில் வெளிவந்த ஓர் ஆய்வு முடிவு. ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் பேச்சியல் மற்றும் கேள்வியியல்துறை சென்னையை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட அந்த ஆய்வில், ஐந்து ஆசிரியர்களில் இரண்டு பேர் குரல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
‌ஆசிரியர்கள் தினமும் ஐந்து முதல் ஆறு மணி‌ நேரம் தங்களது குரலைப் பயன்படுத்தி பாடம் நடத்த வேண்டியுள்ளது. ஆனால், அவர்கள் குரலையும் குரல்வளையையும் பாதுகாக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது. 'வகுப்பறையில் பாடம் எடுத்த பிறகு அவர்கள் சரியாகப் பேச முடியாமல் அவதிப்படுகின்றனர். இன்னும் சிலர் அதீத தொண்டை வலி வந்து தவிக்கிறார்கள்' என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி ஆய்வை நடத்திய ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் பேச்சியல் மற்றும் கேள்வியியல் துறைத் தலைவரும், பேராசிரியருமான பிரகாஷ் பூமிநாதன் நம்மிடம் பேசினார்.
"சென்னையில் உள்ள ஆசிரியர்களை மையமாகக் கொண்டு ‌நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஐந்தில் ஒரு ஆசிரியருக்கு குரல் சார்ந்த பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது. அதிலும் குரல் சார்ந்த பிரச்னை ஆரம்பக்கட்டத்தில் இருக்கும்போது ஆசிரியர்கள் பெரும்பாலும் வீட்டு வைத்தியம் செய்துகொண்டு அலட்சியமாக இருக்கின்றனர் என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
சென்னையில் சுமார் 1,500 பள்ளிகளுக்குமேல் இயங்கிவருகின்றன. அவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர்கள் தங்களது குரலையும், குரல்வளையையும் பாதுகாக்க முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. மேலும், ஆசிரியர்களுக்கிடையே 'வோகல் ஹைஜீன் புரோக்ராம்' எனப்படும் குரல் மற்றும் குரல்வளை பாதுகாப்பு யுக்திகள் குறித்த விழிப்புணர்வு குறைந்துவருவது வருத்தத்தைத் தருகிறது.
 நம் தொண்டைப் பகுதியின் நடுவே `லாரிங்ஸ்' எனப்படும் `வாய்ஸ் பாக்ஸ்' அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள குரல்நாணில் இருந்துதான் (வோகல் கார்ட்ஸ்) நம் குரல் பிறக்கிறது. அதாவது, நுரையீரலிலிருந்து வெளியே வரும்‌ காற்று‌, லாரிங்ஸ் பகுதியைக் கடக்கும்போது குரல் நாணில் அதிர்வலைகளை ஏற்படுத்திச் செல்லும். அது நம் சிந்தனையில் கலந்து, வார்த்தைகளுடன்‌ சேர்ந்து நாக்கு, பற்கள், அண்ணம் ஆகியவற்றின் உதவியுடன் பேச்சாக வெளிப்படுகிறது.
பாடகர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளின் பணித்‌தன்மை குரலையே சார்ந்து இருக்கும். எனவே அவர்கள் `புரொபஷனல் வாய்ஸ் யூசர்ஸ்' (Professional Voice Users) என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கெல்லாம் குரலில் பாதிப்பு ஏற்படும்போது ஆரம்பகட்டத்தில் சில அறிகுறிகள் வெளிப்படும்.
1. தொண்டைக் கரகரப்பு.
2. பேச்சின் இடையே இருமல்.
3. குரல் அசதி.
4. குரலில் மாற்றம்.
5. பேச்சின் இடையே குரல் வராமல் இருத்தல்.
6. தொடர்ந்து பேச இயலாமை.
7. விழுங்கும்போது வலி / சிரமம்.
மேற்கூறிய அறிகுறிகள் தோன்றினால், காது, மூக்கு, தொண்டை மருத்துவரையோ அல்லது பேச்சியல்/குரல் நிபுணரையோ சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதில் குறிப்பாக, ஆசிரியர்களுக்குக் குரல் மற்றும் குரல்வளை சார்ந்த பிரச்னைகள் வர முக்கிய காரணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
1. அதிகளவு குரலைப் பயன்படுத்துதல்.
2. இடைவெளியின்றி பலமணி நேரம் பேசுதல்.
3. அளவுக்கு அதிகமாகக் கத்துதல்.
4. போதுமான அளவு ‌தண்ணீர் அருந்தாமை.
5. அதீத எண்ணெய், காரம், செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்பது, (அதிக அளவு கார்பனேட்டட் பானங்கள் பருகுவது).
6. சாக்பீஸ் தூசியில் நீண்டநேரம் இருப்பது.
பெரும்பாலான பள்ளிகளில் ஒரு வகுப்பில் சுமார் 40 முதல் 50 மாணவர்கள் இருக்கும்போது அவர்கள் அனைவருக்கும் கேட்கும்படி‌ ஓர் ஆசிரியர் பேச வேண்டியிருக்கும். அப்போது அவர்கள் தங்களது குரல்வளைக்கு அதிக வேலை கொடுத்து ஒலியின் அளவை உயர்த்துவார்கள். இதுவே குரல் சார்ந்த பிரச்னைக்கான முதல் படியாக அமைகிறது. மேலும், விளையாட்டுத் திடலிலும் உணவு இடைவேளையின்போதும் மாணவர்களைத் தங்கள் ‌கட்டுக்குள் கொண்டுவர ஆசிரியர்கள் தங்களது குரலை அதிகரிக்க வேண்டியிருக்கும். இந்நிலையில், கணக்கு ஆசிரியர்களின் நிலை பற்றி சொல்லத் தேவையில்லை. குரல் மற்றும் குரல்வளையைப் பாதுகாக்க கடைப்பிடிக்க வேண்டியவை:
1. சரியான இடைவெளியில் நீர் அருந்த வேண்டும். இது தொண்டையில் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும்.
2. நீர் அருந்துவதை‌ அதிகரிப்பதுடன் கார்பனேட்டட்‌ டிரிங்க்ஸ் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
3. ஒரு நாளில் இரண்டு முறைக்குமேல் காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
4. சிலர் தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டே இருப்பார்கள். இதை `தொண்டை அழற்சி' (Throat Clearing) என்பார்கள். இது நம் குரல்நாணுக்கு அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தும் என்பதால், படிப்படியாக இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
5. அதிக காரம் மற்றும் எண்ணெய் சேர்த்த உணவுகள் உட்கொள்வதால் வயிற்றில் உள்ள அமிலங்கள் மேலே எழும்பி `கேஸ்ட்ரோ ஈசோஃபேகல் ரிஃப்ளக்ஸ் டிஸ்ஆர்டர் (Gastro esophageal Reflux Disorder - GERD) என்ற நிலை ஏற்படலாம். இதுவும் குரல்வளைக்கு‌ பாதிப்பை ஏற்படுத்தும்.
6. தொடர்ந்து பல மணி நேரம் குரலைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வப்போது இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவை தவிர, கீழ்க்காணும் வழிமுறைகளை அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.
* ஆசிரியர்களுக்கு வருடத்துக்கு இருமுறை துறை சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
* ஆசிரியர்களுக்கு அவர்களது பயிற்சிக் காலத்தில் குரல் மற்றும் குரல் வளைசார்ந்த பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடப் பகுதிகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
* சரியான இடைவெளியில் தாங்கள் பணியாற்றும் பள்ளியிலேயே குரல்நல பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டால், தொடக்கநிலையிலேயே பிரச்னைகளைக் கண்டறியலாம்.
* அரசாங்கம், ஆசிரியரின் குரல் அனைத்து மாணவர்களுக்கும் எளிதாகச் சென்று சேரும்படி வகுப்பறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இத்துடன் மாணவர் - ஆசிரியர் எண்ணிக்கை சீர்ப்படுத்தப்பட வேண்டும்.
`வருமுன் காப்போம்' என்று போதிக்கும் ஆசிரியர்கள் வெறும் போதனையுடன் நின்றுவிடாமல் அவர்கள் தங்களது குரலையும், குரல் நாணையும் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்'' என்கிறார் பிரகாஷ் பூமிநாதன்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One