தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர், ஆசிரியர்களில் 60 சதவீதம் பேருக்கு இன்னும் தபால் வாக்குகள் வழங்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதனுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளன. இதற்காக 4 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் வாக்குச் சாவடி பணிகள் வழங்கப்பட்டுள்ளன.இதற்கிடையே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஜனவரி மாதம் தொடர் வேலைநிறுத்தம் செய்தனர்.
அரசின் கடும் நடவடிக்கைகள் காரணமாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.இந்நிலையில் நடைபெற உள்ள தேர்தலில் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சங்கங்கள் முன்னெடுத்துள்ளன. இதனால் அவர்களின் தபால் வாக்குகள் திட்டமிட்டு முடக்கப்படுவதாகவும், இதுவரை 60 சதவீதம் பேருக்கு தபால் வாக்குகள் வழங்கப்படாமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்இயக்கத்தின் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் கூறும்போது, ‘‘ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் விளைவாக எங்களை தேர்தல் பணியில் அதிகம் பயன்படுத்தினால் வாக்குப்பதிவில் தங்களுக்கு எதிராக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஆளும்கட்சி செயல்படுகிறது.இதனால்தான் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் பயன்பாட்டை பெருமளவு குறைத்து விட்டனர். தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் உதவியுடன் இப்போது தபால் வாக்குப்பதிவிலும் முறைகேடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் தபால் வாக்குகள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், இதுவரை 40 சதவீதம் பேருக்கு மட்டுமேதபால் வாக்குகள் கிடைத்துள்ளன.
வழக்கு தொடர முடிவு
கடந்த தேர்தலின்போதும் தபால் வாக்குகளில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டன. அதேபோல், இந்த முறையும் அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ள ஊழியர்களின் தபால் வாக்குகளை திட்டமிட்டு முடக்க முயற்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 15-ம் தேதிக்குள் தபால் வாக்குகள் கிடைக்காவிட்டால் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.
No comments:
Post a Comment