எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழகத்தில் 7 ‘அரசு ஸ்மார்ட் பள்ளிகள்’!

Friday, April 12, 2019

ரிச்மண்ட்(யு.எஸ்): அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்களின் முயற்சியால் தமிழ்நாட்டில் 7  அரசுப் பள்ளிகள் “ஸ்மார்ட் பள்ளி” களாக தரம் உயர்த்தப் பட்டுள்ளது. நமது கிராமம் நமது கடமை (Our Village Our Responsibility) அமைப்பு இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தியுள்ளார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் முதலில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார்கள். அமெரிக்காவில் வசிக்கும் கவிதா பாண்டியன் தனது சொந்தப் பணத்திலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் இந்தப் பள்ளியில்  “ஸ்மார்ட் வகுப்பறை” அமைத்துத் தர ஏற்பாடு செய்துள்ளார். கொள்முதல் மற்றும் டெக்னிகல் உதவிகளை குணா செய்திருந்தார்.கோட்டையூரில் வசிக்கும் மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரி உதவிப் பேராசிரியர் கார்த்திக் இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்தார். 
கணிதம், கணிணி, ஆங்கிலப் பாடங்கள் ஸ்கைப் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இண்டெர்நெட் மூலமாகவும் ஆன்லைன் பாடங்களை படிக்க முடியும். பள்ளி ஆசிரியர்கள் கற்றுத் தரும்  பாடங்களை தொலைக்காட்சி மறு ஒளிபரப்பு போல், மீண்டும் பார்த்துக் கொள்ளும் வசதி உண்டு. பாடங்கள் எடுக்கும் போது செய்முறை விளக்கப் படங்கள், வீடியோக்களை மாதிரியாகக் காட்டிச் சொல்வதால் மாணவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. ஆழமாகவும் மனதில் பதிகிறது.  ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும்  பயனடையும் வகையில் சுழற்சி முறையில் இந்த ஸ்மார்ட் வகுப்பறையை உபயோகிக்கிறார்கள்.
தைலாபுரம் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் வெற்றியைத் தொடர்ந்து பிற பள்ளிகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த “நமது கிராமம் நமது கடமை” அமைப்பின் கவிதா பாண்டியன் முயற்சி எடுத்துள்ளார். விழுப்புரம் பள்ளி ஆசிரியை அன்னபூர்ணா மோகன் வழிகாட்டுதல் மற்றும் உதவியுடன் செலவுத் தொகையையும் 75 ஆயிரமாகக் குறைத்துள்ளனர்.
வானவரெட்டி கிராமத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் மணி மற்றும் கிராம மக்கள் நிதியுதவியுடன், விழுப்புரம் மாவட்டம் வானவரெட்டி பஞ்சாயத்து தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
இங்கிலாந்தில் வசிக்கும் டாக்டர்.ஹேமாவின் நிதியுதவியுடன் அரியலூர் மாவட்டம், இடையத்தான்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது. பள்ளி ஆசிரியை எமல்டா குயின் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், கொன்னேரிக்குப்பம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் கவிதா பாண்டியன் மற்றும் கிராம மக்களின் நிதியுதவியுடன் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப் பட்டது. பள்ளி ஆசிரியர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் பெரும் முயற்சி எடுத்து இந்தப் பணியை முடித்துள்ளார்.   மேலும் ஆசிரியர் ஸ்டாலின் இந்தப் பள்ளியில், முயற்சியால் அரசு தன்னிறைவுத் திட்டம் மூலம் நண்பர்கள் உதவியுடன் கம்ப்யூட்டர் லேப்  அமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. 
திருவண்ணாமலை மாவட்டம், அல்லியாள மங்கலம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில்  இந்திய ராணுவ வீரர் வீரமணி அப்பாசாமி மற்றும் கிராம மக்களின் நிதியுதவியுடன் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டம் நிறைவேற்றப் பட்டது.
விருதுநகர் மாவட்டம், கோட்டையூர் ஆதி திராவிடர் நலத்திட்ட நடுநிலைப் பள்ளி  கிராம மக்களின் நிதியளிப்பு மற்றும் அரசு தன்னிறைவுத் திட்ட உதவியுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. உதவிப் பேராசிரியர் கார்த்திக் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார்.
மற்றும் விருதுநகர் மஹாராஜபுரம்  அரசு மேல்நிலைப் பள்ளி, பழைய மாணவர் அழகுராஜா மற்றும் நண்பர்கள் நிதியுதவியுடன் அரசு தன்னிறைவுத் திட்டத்தின் மூலம் ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கியுள்ளார்கள். 
இந்த ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தை ஒருங்கிணைக்கும் “நமது கிராமம் நமது கடமை” அமைப்பின் கவிதா பாண்டியன், தமிழகத்தின் ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் இதை நிறைவேற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். உள்ளூர் அளவில் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன், தமிழக அரசின் தன்னிறைவுத் திட்டத்தின் மூலம் இதை செய்து முடிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் “தன்னிறைவுத் திட்டம்” நிதியுதவியுடன் இந்த ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தை தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் செயல்படுத்த விரும்புகிறவர்கள்  https://www.facebook.com/ourvillageourresponsibility/ என்ற முகநூல் பக்கம் வழியாகத் தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One