அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்துப் பள்ளிகளிலும் இனி 'புத்தக வங்கி' செயல்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது. அதன்படி, மாணவர்கள் தேர்ச்சிபெற்றவுடன் தாங்கள் பயன்படுத்திய புத்தகங்களை இந்த வங்கியில் சமர்ப்பிக்கலாம். அடுத்த வகுப்பிற்கான புத்தகங்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். இது, சுழற்சி முறையில் நடக்கும்.
ஒரு வருடத்திற்கு 40 ஆயிரம் டன் காகிதங்களைப் பயன்படுத்தி, எட்டுக் கோடி புத்தகங்களை ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தயாரிக்கிறது. இந்த அளவுக்குக்கு கணிசமான காகிதப் பயன்பாட்டிற்கு எட்டு லட்சம் மரங்களை அழிக்க வேண்டியிருக்கிறது.
அரசு கொண்டுவந்திருக்கும் இப்புதிய அறிவிப்பான புத்தக வங்கியின்மூலம் மரங்களை நாம் பாதுகாக்க முடியும். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி இதை நடைமுறைப்படுத்த இருக்கிறது, தமிழக பள்ளிக் கல்வித்துறை.
காலம் தப்பி பெய்யும் பருவ மழை, குளிர்ப் பிரதேசங்களிலும் அடிக்கிற கொடூர வெய்யில், குடிநீர் பற்றாக்குறை என முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பருவநிலை மாற்றத்தை எல்லோரும் உணர்ந்துவருகிறோம். இதற்கு, முக்கியமாக மரங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இனி, நடக்கப்போகும் மோசமான விளைவுகளை முடிந்த அளவு தடுக்கும் பொருட்டு உலக நாடுகள் அனைத்தும் 'மரங்களைக் காப்போம்' என்கிற முழக்கத்தை அடிப்படையாகவைத்து, பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவருகிறார்கள். இந்தியா இயன்ற அளவு செய்வது போலவே, தமிழ்நாடும் பசுமையைப் பாதுகாப்பதற்கு தன்னளவில் முயன்றுவருகிறது. அதில் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்பைப் பார்க்கவேண்டியிருக்கிறது.
No comments:
Post a Comment