மக்களவை, பேரவை இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 13) இறுதிக் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்பின் அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மக்களவை, சட்டப் பேரவை இடைத்தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி கடந்த மார்ச் இறுதியில் நடைபெற்றது. இதன்பின், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டாம் கட்ட பயிற்சி நடத்தப்பட்டது.
தபால் வாக்குகள்-தேர்தல் சான்று: சொந்த தொகுதியில் இல்லாமல் வேறு தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. சொந்தத் தொகுதியிலேயே தேர்தல் பணியாற்ற உள்ளவர்களுக்கு பணிச் சான்று அளிக்கப்படுகிறது. இந்தச் சான்றுகளைப் பயன்படுத்தி அவர்கள் தாங்கள் தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடியிலேயே தங்களது வாக்குகளைச் செலுத்தலாம். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பின்போது, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்பட்டன.
இறுதிக் கட்ட பயிற்சி: ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட தபால் வாக்குகளை வரும் சனிக்கிழமை (ஏப். 13) நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பிலேயே செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடங்களில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். அந்தப் பெட்டிகளில் தபால் வாக்குகளைச் செலுத்தலாம்.
பயிற்சி வகுப்பில் தபால் வாக்குகளைச் செலுத்த இயலாதவர்கள், அஞ்சல் துறையின் மூலமாக வாக்குகளை அனுப்பலாம். வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாளான 17-ஆம் தேதி அன்று, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் எந்தெந்த வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தெரிவிக்கப்படும். தொலைவாக உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ளோர், வரும் 17-ஆம் தேதியன்று இரவு அங்கேயே தங்கி மறுநாள் தேர்தல் பணிகளை மேற்கொள்வர். வாக்குப்பதிவு முடிவடைந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, அவை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகே, ஊழியர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்
No comments:
Post a Comment