அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிட விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது. இதனால் விரைவில் போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:வரும் 2019-20-ம் கல்விஆண்டில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பற்றிய அறிக்கை தயார் செய்ய வேண்டியுள்ளது. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் காலிப்பணியிடங்கள் விவரங்களை முதன்மை கல்வி அதிகாரிகள் தயார் செய்து ஏப்.26 (நாளை)க்குள் jdhssed@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதுதொடர்பான தகவல் அறிக்கையை அரசுக்கு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டி இருப்பதால் காலதாமதமின்றி சரியான விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு முடிவு
இதற்கிடையே போட்டித்தேர்வின் மூலம் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் இப்போது நடைபெற்று வரும் சூழலில், விரைவில் போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment