திருவள்ளூரில் பொதுமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி நீரில் மிதந்தபடி யோகாசனம் செய்து காட்டிய மாணவர்கள். (வலது) நிகழ்ச்சியைப் பார்வையிட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார்.
மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தும் நோக்கில், நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்தபடி, யோகாசனம் செய்து 40 மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 18-இல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, பொதுமக்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாணவ, மாணவியர் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் நாள்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதன், அவசியம் என்பதை வலிறுத்தும் நோக்கில், தண்ணீரில் மிதந்தபடி யோகாசனம் செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்து, மாணவர்கள் நீரில் மிதந்தபடி, யோகாசனம் செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது, நீரில் மிதந்தபடியே பல்வேறு ஆசனங்களை மாணவர்கள் செய்து காட்டினர். முன்னதாக, இத்தேர்தலில் ஜனநாயகக் கடமையாற்றுவோம் என 120-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர், நீச்சல் குளத்தில் மிதந்தபடியே யோகாசனம் செய்து காட்டிய 40 மாணவர்களையும் பாராட்டி, மாவட்ட விளையாட்டுத் துறை மூலம் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் செ.அருணா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் ராட்சத பலூன்...
திருவள்ளூரில் கடந்த தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவாகின. இதை 100 சதவீதமாக அதிகரிக்க வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்களிக்கும் நாளைக் குறிப்பிட்டு ராட்சத பலூன் பறக்க விடப்பட்டுள்ளது. இந்த பலூன் திருவள்ளூர்-திருப்பதி சாலையில் செல்லும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பறக்க விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment