எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தாம் படித்த பள்ளியின் சேர்க்கைக்காக வீடு வீடாக நோட்டீஸ் கொடுக்கும் பள்ளி மாணவ மாணவிகள்..!

Tuesday, April 23, 2019


படித்த பள்ளியை மறந்து அடுத்த வாழ்க்கைக்குத் தயாராகும் மத்தியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு கட்டத்தில் அனைவரும் கடந்து செல்பவர்களாக மாறிவிடுகிறார்கள். குரு, நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி எனப் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. சரி, இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கக் கோவை மாவட்டம், காரமடை ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் வீடு வீடாகச் சென்று மாணவர்களின் சேர்க்கைக்காகப் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இப்பள்ளியானது 133 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, பவானி ஆற்றங்கரையில் மிகவும் இயற்கை சூழல் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

மேலும், பள்ளியில் நிர்வாகமும் மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களாக இல்லாமல் சக தோழனாகப் பழகி வருகிறார்கள். மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான விருதை 2018-ம் ஆண்டில் பெற்றிருக்கிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்குச் சவால் விடும் விதமாக அனைத்து வசதிகளுடன் மாணவ மாணவியர்களை வழி நடத்திச் செல்கிறது. ஒரு காலத்தில் கிராமப்புறத்தில் இருப்பவர்கள்தான் நகரத்துக்குச் சென்று படிப்பார்கள். ஆனால், சற்று வித்தியாசமாக நகரத்தில் இருக்கும் மாணவ மாணவிகள் இப்பள்ளியைத் தேர்ந்தெடுத்து படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். மாணவர்களின் தனித்திறமையால் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்று விளங்குகிறது.

பள்ளிக் கல்வி துறையிடமிருந்து இந்தக் கல்வி ஆண்டில் மூன்று விருதுகளையும் மாவட்ட ஆட்சியரிடமிருந்து ஐந்துக்கு மேற்பட்ட பரிசு கோப்பைகளையும் வாங்கியுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் நேரடி பாராட்டுக்கள் பெற்ற ஒரே பள்ளி என்ற பெருமையும் பெறுகிறது. என்ன இருக்கிறது இப்பள்ளியில் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கும். அதைத் தெரிந்துகொள்ள இப்பள்ளியின் ஆசிரியர் பரமேஸ்வரன் அவர்களுடன் பேசினோம். அவர் கூறுகையில், எங்களுடைய மாணவர்களின் தனித்திறமையை இந்த உலகத்துக்கு அறிமுகம் செய்வதற்கு அவர்களுக்கு எது பிடிக்குமோ அத்துறையில் கவனம் செலுத்த ஆரம்பிப்போம். வருங்காலத்தில் அவர்கள் என்ன படிக்க வேண்டுமோ இப்போதே தீர்மானித்துக் கொள்கிறார்கள். மிகவும் பழைமையான பள்ளி என்பதால் சில மாறுதல்கள் செய்து தனியார் பள்ளிகளுக்கு ஈடான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம்.

குறிப்பாக, ஸ்மார்ட் வகுப்பறைகள், கல்ச்சுரல் கிளப், ஸ்போர்ட்ஸ் கிளப், JRC, நூலகம், 2 தொடுதிரை வகுப்புகள், இயற்கை சூழ்நிலையில் ஒரு வகுப்பறை, காரத்தே, யோகா, சுற்றுச்சூழல் மன்றம், இயற்கை பேரிடர் மேலாண்மைக்குழு, முதலுதவிக் குழு என அவர்களின் வளர்ச்சிக்கு எங்களால் முடிந்த உதவிகளும் செய்து தருகிறோம். எங்கள் பள்ளியிலிருந்து மாணவர்கள் பல தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் அறிவு சார்ந்த விளையாட்டுகளில் பங்கு பெறச் செய்து அவர்களின் எதிர்காலத்துக்கு வழி செய்து தருகிறோம். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்விக்கான ( LKG -7) சேர்க்கை நடைபெறுகிறது. இங்கு படித்த முன்னாள் மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் ,வீடு வீடாகச் சென்று தாம் படித்த பள்ளியின் சேர்க்கை சதவிகிதத்தினை அதிகம் செய்ய நோட்டிஸ் கொடுத்தும் ஊர்பொதுமக்களிடம் பேசியும் வருகிறார்கள். இந்த வருடத்தின் "புதுமை பள்ளியின் "விருதை வாங்க வேண்டும் என்றுதான் எங்கள் லட்சியம். வெளியிலிருந்து கிடைக்கும் நட்புகள் மூலமாகவும், இவ்வூர் பொதுமக்கள் மூலமாகவும் மாணவர்களின் வங்கி கணக்கில் சிறிது தொகையை சேர்த்து அவர்களின் எதிர்கால கல்விக்கு ஊக்கம் அளிக்கிறோம்.

எனது வெளிவட்ட நண்பர்கள் மூலமாக இங்கிருந்து சென்ற நல்ல ஒழுக்கமும் கல்வியும் கொண்ட மாணவர்களுக்கு அவர்களின் மேல் படிப்புக்கு இன்றும் உதவி வருகிறோம். அம்மாணவர்களும் தொடர் கவனிப்பில் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் மாணவர்களின் வசதிக்காகப் பள்ளிக்கு வந்து செல்ல வாகன வசதியும் செய்து தர இருக்கிறோம். ஒரு மாணவனின் வெற்றி ஆசிரியரின் கையில் என்றில்லாமல் அவனுடைய கையில் என்று உழைத்து வாழ வேண்டும் என்கிறார். இப்பள்ளியின் நூறு சதவிகித சேர்க்கைக்கு நமது வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One