விண்வெளி பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதில் பயன்படுத்தும் வார்த்தைகளும் யுத்திகளும் விண்வெளி பற்றிய தகவல்களைப் புரியாத புதிராகவே ஆக்கிவிடுகிறது என்பதுதான் உண்மை. அதை மாற்றும் விதமாக விண்வெளி, செயற்கைக்கோள்கள், ராக்கெட் பற்றிய தகவல்களை நாடகங்களாகவும் கதைகளாகவும் குழந்தைகளுக்கு எளிமையான முறையில் விளக்கி, விண்வெளி பற்றிய அறிவை விதைக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஜெகதீஸ் கண்ணா. இது தொடர்பாக அவரைத் தொடர்புகொண்டோம்.
``நான் ஒரு ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயர். குழந்தையாக இருந்தபோதே விண்வெளி பற்றி நிறைய தேடுதல்கள் இருந்தது. அதனால் உயர்நிலைப்படிப்பில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங்கை தேர்வு செய்தேன்.
படிப்பு முடிந்ததும் நிறைய நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் வந்தன. ஆனால் கிராமப்புற மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு நான் படித்த படிப்பைக் கொண்டு சேர்ப்பதை என்னுடைய லட்சியமாக எடுத்துக்கொண்டேன். அதனால் வாயுசாஸ்த்ரா (Vaayusastra) என்ற அமைப்பைத் தொடங்கினேன். அதன் மூலம் விண்வெளி பற்றிய தகவல்களை குழந்தைகளுக்குப் புரியும் விதமாகச் செய்முறையுடன் கூடிய கதைகளை உருவாக்கினேன். என்னுடைய ஐடியாவை சென்னை ஐ.ஐ.டியில் பகிர்ந்தேன். அங்கு கிடைத்த நிதி உதவிகள் மூலமாக சில நாடகக் கலைஞர்களுக்குப் பயிற்சிகள் அளித்தேன்.
தற்போது நாடகக் கலைஞர்கள் மற்றும் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயர் மூலம் விண்வெளி பற்றிய கதைகளை இரண்டு கார்ட்டூன் கதாபாத்திரங்களாக உருவாக்கி, அதை குழந்தைகளின் முன்னிலையில் நாடகங்களாக அரங்கேற்றி விண்வெளி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இப்போது எங்களுடைய குழுவில் 8 ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயர், 25 நாடகக் கலைஞர்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவில் கவனம் செலுத்தி வருகிறோம். காற்றுனா என்ன... செயற்கைக் கோள்கள் எப்படிச் செயல்படுகிறது, கோள்களென்றால் என்ன, என்பது போன்று தகவல்களைக் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப பாடத்திட்டங்களாக உருவாக்கி பயிற்சிகள் செய்து நாடகங்களாக அரங்கேற்றுகிறோம். இதனால் மாணவர்கள் மட்டுமல்லாமல் நலிவடைந்த நாடகக் கலைஞர்களும் பயனடைகின்றனர். இதுவரை இருபத்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சிகள் வழங்கியுள்ளோம். அடுத்தபடியாக கிராமங்களில் உள்ள பள்ளிகளை நோக்கி பயணம் செய்யும் திட்டம் உள்ளது. கட்டணம் கொடுக்க முடிகிற பள்ளிகளில், அவர்களின் வசதிக்கு ஏற்ப கட்டணங்களைப் பெற்றுக்கொள்கிறோம். பயணமும் பயிற்சியும் தொடரும்'' என்கிறார் புன்னகையுடன்.
No comments:
Post a Comment