எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிகளின் மதிப்பெண் மோகத்துக்கு 'செக்!'

Saturday, April 20, 2019




பிளஸ் 2 தேர்வில், மாணவர்களின், 'டாப்' மதிப்பெண் மற்றும், 'சென்டம்' பட்டியல் வெளியிடப்படவில்லை. அதனால், பெற்றோரும், மாணவர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். பாடங்களை புரிந்து படித்தவர்கள், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன்மூலம், மனப்பாடம் செய்து, விடைத்தாளில் துப்பும் பழக்கத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளதால், கல்வியாளர்கள் மிகப் பெரிய மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு ஆண்டும், எத்தனை மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்றனர்; அதிக மதிப்பெண் பெற்ற பள்ளிகள் எத்தனை என்பது போன்ற, விபரங்கள் வெளியிடப்படும். அதிக மதிப்பெண் எடுத்த மாணவ - மாணவியரை பாராட்டுவதும், அவர்களை ஊடகங்களில், 'ஹீரோ' போல் காட்டுவதும், வழக்கமாக இருந்தது.இதை பார்க்கும் பெற்றோரும், மாணவர்களின் உறவினர்களும், தங்கள் குடும்பத்தில் மதிப்பெண் குறைந்த, மாணவர்களை திட்டுவதும், அவர்களை ஏளனமாக பார்ப்பதும், பெரும் வேதனை அளிக்கும் சம்பவங்களாக இருந்தன. பிளஸ் 2வில், 'டாப்' மதிப்பெண் பெற்றால் மட்டுமே, எதிர்காலம் நன்றாக இருக்கும். மற்றவர்கள் வாழவே தகுதியில்லாதவர்கள் போன்றும், சில பெற்றோரும், சமூகமும் கருதி வந்தன.இந்த சூழலால், மதிப்பெண் குறைந்த பல மாணவர்கள், பெற்றோர், உற்றார், உறவினரின் ஏச்சு, பேச்சுகளுக்கு பயந்து, தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுத்தனர். இதை கட்டுப்படுத்தும் வகையில், புதிய திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வி துறை அறிமுகம் செய்தது.அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பேற்றதும், பள்ளி கல்வி செயலராக இருந்த உதயசந்திரன், பள்ளி கல்வி இயக்குனராக இருந்த இளங்கோவன், தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி ஆகியோர், ஆலோசனை நடத்தினர். முடிவில், பிளஸ் 2 பொது தேர்வில், 'டாப்பர்' மற்றும், 'சென்டம்' எனும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படாது என, அறிவித்தனர்.

இந்த உத்தரவை, பள்ளி கல்வி முதன்மை செயலராக பொறுப்பேற்ற பிரதீப் யாதவும், பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகனும், தொடர்ந்து அமல்படுத்தி வருகின்றனர். அதனால், மூன்றாம் ஆண்டாக, இந்த ஆண்டும், முதல் மாணவர் பட்டியல் வெளியாகவில்லை.மேலும், 'புளூ பிரின்ட்' முறையையும், பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் நீக்கினார். விடைத்தாள் திருத்தத்தில், சென்டம் வழங்குவதற்கான முறைகளில், தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி, கடும் கட்டுப்பாடுகளை புகுத்தினார். அதனால், நேற்றைய, பிளஸ் 2 தேர்வில், மதிப்பெண் அளவு பெரும்பாலும் குறைந்தது.
இந்த ஆண்டு முதல், 1,200 மதிப்பெண் முறை நீக்கப்பட்டு, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், மொத்தம், 600 மதிப்பெண் முறை அமலாகியுள்ளது. மேலும், புளூ பிரின்ட் இல்லாமல், புத்தகம் முழுவதையும் மாணவர்கள் படித்து, தேர்வு எழுதியுள்ளனர்.அதனால், மாணவர்கள் பெற்றுள்ள, ஒவ்வொரு மதிப்பெண்ணும், மதிப்பு மிகுந்ததாக மாறியுள்ளது. மேலும், டாப் மதிப்பெண் பிரச்னை இல்லாததால், கிடைத்த மதிப்பெண்ணை வைத்து, பெற்றோரும், தங்கள் பிள்ளைகளின் உயர் கல்வியை முடிவு செய்ய, துவங்கி உள்ளனர். இது தான், ஆரோக்கியமான கல்வி மற்றும் தேர்வு மேம்பாடு என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One