எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அங்கீகாரமற்ற பள்ளிகள் பட்டியலை செய்தித்தாளில் வெளியிட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

Thursday, April 11, 2019




 தமிழகத்தில் அங்கீகாரமற்ற  பள்ளிகளைக் கண்டறிந்து அது தொடர்பான பட்டியலை பொதுமக்கள் அறியும் வகையில் செய்தித்தாள்களில் பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும் என மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:  குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும் என்றும்,  அங்கீகாரமின்றி எந்தவொரு பள்ளியும் செயல்படவில்லை என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 
அனைத்து வகைப் பள்ளிகளும்...: இவ்வாறு அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும் சென்னை மாவட்டத்தில் ஒரு பள்ளி எவ்வித அங்கீகாரமும் இல்லாமல் செயல்பட்டு வந்து,  பத்தாம் வகுப்பு படித்த மாணவ,  மாணவிகள் பொதுத்தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பொருட்டு பெற்றோர்,  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு அசாதாரண சூழல் நிலவி அரசின் கவனத்துக்குச் சென்றது.
 இந்தநிலையில் தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டம் மற்றும் ஏனைய பாடத் திட்டங்களின் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும்,  பகுதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள்,  சிபிஎஸ்இ,  ஐசிஎஸ்இ,  ஐஜிசிஎஸ்இ,  ஐபி போன்ற வாரியங்களில் இணைப்புப் பெற்ற பள்ளிகள் அனைத்தும் மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும் என நீதிமன்றத் தீர்ப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ்கள் செல்லாது:  இதையடுத்து அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சார்ந்த விவரங்கள் முதன்மைக் கல்வி அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்டன.  அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பள்ளிகள் தவிர தற்போதும் தனியார் பள்ளிகள் உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவது தெரிய வருகிறது.  இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ,  மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுடன்,  அந்தப் பள்ளிகளால் வழங்கப்படும் கல்விச் சான்றுகள் தகுதியற்றதாகவும்,  அதில் படிக்கும் மாணவ,  மாணவிகள் அரசால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகள் எழுத முடியாத நிலையும் ஏற்படும்.
 கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தும் மாவட்டத் தொடர்பு அலுவலர்களாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ள நிலையில்,  சட்டத்தை மீறி அங்கீகாரமற்ற பள்ளிகள் செயல்பட்டு வருவது முதன்மைக் கல்வி அலுவலர்கள் அவர்தம் பணியினை சரிவர செய்யவில்லை என்பதையே குறிக்கும். எனவே ஒவ்வொரு முதன்மைக் கல்வி அலுவலரும் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளின் அங்கீகார விவரங்களை கோரிப் பெற வேண்டும்.
நேரில் சென்று ஆய்வு நடத்த உத்தரவு:  வட்டாரக் கல்வி அலுவலர்கள் அவரவர் ஆளுகைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும்,  மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கும், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அவரவர் ஆளுகைக்குள்பட்ட பள்ளிகளில் உள்ள அரசு உதவி பெறும்,  அரசு உதவி பெறாத உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், சிபிஎஸ்இ,  ஐசிஎஸ்இ போன்ற வாரியங்களில் இணைப்புப் பெற்ற பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் நேரில் சென்று அங்கீகார ஆணையினை கோரிப் பெற வேண்டும்.
அங்கீகார ஆணை முன்னிலைப் படுத்தாத பள்ளிகளின் பட்டியலைத் தயார் செய்து முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.  அந்தப் பட்டியலின் முடிவில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகள் தவிர தங்களது கல்வி மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் வேறு ஏதும் இல்லை என வட்டாரக் கல்வி அலுவலர்கள்,  மாவட்டக் கல்வி அலுவலர்கள் சான்றளிக்க வேண்டும்.  இந்த நடைமுறைகள் அனைத்தும் வரும் ஏப். 23-ஆம் தேதிக்குள் முடிவடைய வேண்டும்.
அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் சார்ந்த விவரத்தை அந்தந்த பகுதிகளில் செய்தித் தாள்கள் மூலமாக பொதுமக்கள் அறியும் வகையில் பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும்.
வரும் கல்வியாண்டு (2019-2020) தொடங்கும்போது அவரவர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் என்பதையும், குழந்தைகளும் அங்கீகாரம் உள்ள பள்ளிகளில் கல்வி பயில்கின்றனர் என்பதையும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இந்தப் பள்ளி அங்கீகாரம்  இன்றி செயல்படும் பள்ளி
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் முகப்பில் இந்தப் பள்ளி அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளி என்ற தகவலை ஒட்ட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளின் முகப்பில் இந்தப் பள்ளி அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளி என பெற்றோர்,  பொதுமக்கள் அறியும் வகையில் தகவல் ஒட்டப்பட வேண்டும்.  அதுபோன்ற பள்ளிகளில் படிக்கும் வகுப்பு வாரி மாணவ,  மாணவிகளின் எண்ணிக்கை பெறப்பட வேண்டும்.  இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகள் சார்ந்தும் மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தகவல் தெரிவித்து ஆலோசனை பெற வேண்டும்.
அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளும் தங்களது மாவட்டங்களில் அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அது சார்ந்து பள்ளி வாரியாக அறிக்கையினை மே 29-ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கத் தவறினால்... அங்கீகாரமற்ற பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தவறி அதனால் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கோ,  கல்வி நலனுக்கோ குந்தகம் ஏற்படுமாயின் அது தொடர்பான முழுப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்,  முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One