இன்றைய மில்லினியம் தலைமுறை குழந்தைகளுக்கு கடிதங்களும், போஸ்ட்மேன்களும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் மணியார்டர்களில் கையெழுத்துப் போட்டு குழந்தைகள் பணம் பெறுவது என்பதெல்லாம் சாத்தியமா?
சாத்தியம்தான் என்று காட்டி வருகிறார் ஆசிரியர் பழனிக்குமார். திருநெல்வேலி, கிருஷ்ணாபுரத்தில் உள்ள திருநாவுக்கரசு அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றிவரும் அன்பாசிரியர் பழனிக்குமார்.
இவர் கிருஷ்ணாபுரம் அஞ்சலில் இருந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையைப் பாராட்டி, 10 ரூபாய் ஊக்கத் தொகையை மணியார்டர் மூலமாகத் தமிழகம் முழுவதும் அனுப்பி வருகிறார்.
இப்படி ஓர் எண்ணம் எப்படி ஏற்பட்டதென அவரிடம் கேட்ட போது, ''நான் ஃபேஸ்புக்கில் திருநாவுக்கரசு பிஎஸ் என்ற பெயரில் பள்ளியின் ஐடியைப் பயன்படுத்துகிறேன். அதில் எங்கள் பள்ளிக் குழந்தைகளின் திறமையை பதிவிடுவேன். இதைப் பார்த்த ஃபேஸ்புக் நண்பர்கள் மூலம், எங்கள் பள்ளிக்கு ,நிறைய உதவிகள் கிடைத்தன.
இந்து தமிழில் அன்பாசிரியராக அங்கீகாரம் கிடைத்தது. மாணவர்களுக்கு மூன்று விதமான சீருடைகள், விளையாட்டுப் பொருட்கள், பள்ளிக்குத் தேவையான உதவிகள் கிடைத்தன. அதைப் பார்த்த மாணவர்கள் இன்னும் உற்சாகத்துடன் செயல்பட ஆரம்பித்தனர். இதே போல மற்ற பள்ளிக் குழந்தைகளுக்கும் ஏதாவது செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது.
அப்போது கனிந்த இதயங்கள் அமைப்பைச் சார்ந்த ராஜா பிரதீஸ்கர் என்பவர் உதவி செய்தார். பெரிய தொகை கொண்டு எல்லா பள்ளிகளுக்கும் உதவிட முடியாது. ஆனால் அதே நேரத்தில் சிறிய தொகை கொண்டு நிறையப் பள்ளிகளுக்கு ஊக்கத் தொகை அனுப்பலாம் என்ற எண்ணம் உண்டானது. குறிப்பாக பணத்தை மணியார்டரில் அனுப்பி, கையெழுத்து போட்டு குழந்தைகள் வாங்கினால் சிறப்பாக இருக்குமே என்று நினைத்தேன். செயல்படுத்தினேன்.
இந்த ஊக்கப் பரிசு திட்டத்துக்கு வெளிநாட்டில் உள்ள ஃபேஸ்புக் நண்பர்கள், கனிந்த இதயங்கள் அமைப்பு, ரவி சொக்கலிங்கம் போன்ற நல்லுள்ளங்கள் தொடர்ச்சியாக நிதி உதவி செய்து வருகின்றனர். இது வரை சுமார் 2,500 மணியார்டர்கள் அனுப்பி இருக்கிறேன்'' என்று நெகிழ்கிறார்.
எப்படிக் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து மணியார்டர் அனுப்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, ''ஃபேஸ்புக்கில் தங்கள் பள்ளிக் குழந்தைகளின் திறமைகளை ஆசிரியர்கள் பகிர்வர். அந்தப் பதிவைப் பார்த்து, சம்பந்தப்பட்ட குழந்தையின் பெயர், வகுப்பு, பள்ளி ஆகியவற்றை அந்த ஆசிரியரிடம் கேட்டு, டைரியில் குறித்துக் கொள்வேன். இது போல ஒரு மாதத்தில் முன்னூறு குழந்தைகளின் பெயர் மற்றும் முகவரியை சேகரிப்பேன்.
தினந்தோறும் மதிய உணவு இடைவேளையில் தபால் அலுவலகம் சென்று விடுவேன். மணியார்டர் ஃபார்ம் நிரப்பி, பணம் அனுப்ப வேண்டும். அதை சம்பந்தப்பட்ட பள்ளிக்குத் தகவல் அனுப்ப வேண்டும். உதவி செய்யும் நபர்களுக்கும் கணக்கு காட்ட வேண்டும். சற்றே சிரமங்கள் இருந்தாலும், அதைக் கையெழுத்து போட்டு வாங்கி, மகிழும் குழந்தைகள் முகம், மனக் கண்ணில் தெரியும் போது பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்து போகும்.
முக நூலில் இதற்கென விவரங்கள் பதிவு செய்து செய்து ,கைகளில் வலி வந்து கட்டு போட்டிருந்தது, மதிய உணவு இடைவேளையில் அஞ்சலகம் சென்று விடுவதால், சாப்பிடாமல் பல நாட்கள் பட்டினியாக இருந்த நாட்கள், அம்மாவின் மரணத் துயரிலும் அஞ்சலகம் போக நேரிட்ட தருணங்கள்'' என பல அனுபவங்களைப் பகிர்ந்து நம்மையும் நெகிழவைக்கிறார்.
இந்த பத்து ரூபாய் அவ்வளவு பெரிய தொகையா என்று கேட்டதற்கு பதில் சொல்லும் பழனிக்குமார், ''விருது நகரில் ஃபேஸ்புக் நண்பர் பாரதி சந்தியாவின் 1-ம் வகுப்பு மாணவன் பாடல் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு ஊக்க பரிசாக 10 ரூபாய் அனுப்பினோம். மாணவன் மணியார்டர் படிவத்தில் கையொப்பம் இட்டு அக மகிழ்வோடு ரூபாய் 10 பெற்றார். அதைப் பார்த்த ஆசிரியர் இந்த பத்து ரூபாயை வைத்து என்ன செய்வாய்? என்று கேட்டதற்கு அந்த மாணவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?
'டீச்சர், எனக்கு 2 ரூபாய். என் அக்காவுக்கு 2 ரூபாய். ரூ.1 உண்டியலுக்கு. மீதி 5 ரூபாயை அம்மாவுக்குக் காய்கறி வாங்கக் கொடுப்பேன் டீச்சர்' என்றார். நிச்சயம் இந்த பத்து ரூபாயின் மதிப்பு, மழலை மனதில் லட்சம்தான்'' என்று கூறுகிறார்.
குழந்தைகள் என்றில்லை, பாராட்டை விரும்பாதவர்கள் இந்த உலகில் உண்டா? நாம் காட்டும் சிறு ஊக்குவிப்பு, மிகப்பெரிய மாற்றங்களைத் தருகிறது என்று கூறும் ஆசிரியரை நாமும், நமது பாராட்டுகளால் ஊக்குவிக்கலாமே...
No comments:
Post a Comment