நிகழ் கல்வியாண்டில் (2019-20) மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களை ஒதுக்க இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அங்கு எம்பிபிஎஸ் இடங்கள் 250-ஆக உயர்கிறது.
தமிழகத்தில் தற்போது 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
பெருந்துறையில் சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும் நிகழாண்டு முதல் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர கரூரில் புதிதாக மருத்துவக் கல்லூரி, இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இதனால் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளன.
கடந்த ஆண்டு நிலவரப்படி, பெருந்துறை கல்லூரியிலும் சேர்த்து 3,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்தன. அவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்டன. மீதமுள்ளவை தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.இதனிடையே, நிகழாண்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களையும், திருநெல்வேலி கல்லூரியில் 100 இடங்களையும் அதிகரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய மருத்துவ கவுன்சிலிடம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் விண்ணப்பித்திருந்தது. புதிதாக தொடங்கப்படும் கரூர் மருத்துவக் கல்லூரிக்கு 150 இடங்களை அளிக்குமாறு அனுமதி கோரப்பட்டது.
அதன்பேரில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அதில் முதல்கட்டமாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களை அதிகரிக்கவும், கரூர் மருத்துவக் கல்லூரியில் 150 புதிய இடங்களை உருவாக்கவும் இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்தது.
அதேவேளையில், மதுரை மருத்துவக் கல்லூரியில் சில குறைபாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள், அங்கு எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க தயக்கம் காட்டினர்.
இந்த நிலையில், அண்மையில் தில்லிக்குச் சென்ற சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ ஆகியோர், இந்திய மருத்துவ கவுன்சிலிடம் எழுத்துப்பூர்வ உத்தரவாதங்கள் சிலவற்றை அளித்தனர். மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள உள்கட்டமைப்புக் குறைபாடுகள் சரி செய்யப்படும் என்று அதில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, நிகழ் கல்வியாண்டிலேயே மதுரையில் 100 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதம் அடுத்த சில நாள்களில் கிடைக்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment