திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனக்கான ஒதுக்கீட்டின் கீழ், 2 ஏழைச் சிறுவர்களை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சேர்த்தார்.
திருவண்ணாமலையை அடுத்த கணந்தம்பூண்டி கிராமத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சாதாரண ஏழை, எளிய மாணவர்கள் சேருவது கடினம்.
ஆனால், அந்தந்த தொகுதி மக்களவை உறுப்பினர் (எம்.பி.), மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தங்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ், மாணவ, மாணவிகளைச் சேர்க்க பரிந்துரைக் கடிதங்களைத் தரலாம்.
இந்த நிலையில், போளூரை அடுத்த வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த காகிதங்கள், கண்ணாடி புட்டிகளை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வரும் முருகன் - எல்லம்மாள் தம்பதியரின் மகள் வனிதா (6), போளூரை அடுத்த எட்டிவாடி கிராமத்தில் பெற்றோர் இறந்ததால் யாருடைய ஆதரவும் இல்லாமல் இருந்து மீட்கப்பட்ட சரவணன் (6) ஆகியோரை தனது ஒதுக்கீட்டின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அண்மையில் சேர்த்தார்.
மேலும், 2 சிறுவர்களும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிப்பதற்கான அனைத்து கல்விக் கட்டணங்களையும் தனது (ஆட்சியர்) விருப்ப நிதியில் இருந்து செலுத்துவதற்கான ஆணையையும் பள்ளி முதல்வரிடம் ஆட்சியர் வழங்கினார். ஆட்சியரின் இந்த மனிதாபிமான செயல் பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பைப் பெற்றது.
No comments:
Post a Comment