எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த மாணவர்கள், ஆசிரியர் விகிதம் 20:1ஆக மாற்றப்படுமா?

Tuesday, May 28, 2019


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்திடவும், உபரி ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு கண்டிடவும் மாணவர்கள், ஆசிரியர் விகிதத்தை முன்பு இருந்ததுபோல் 20:1 ஆக மாற்றியமைத்து அறிவித்திடவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளை காட்டிலும் தனியார் ஆங்கில பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள போட்டி உலகில் தங்களது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என்ற பெற்றோர்களின் ஆசையே தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை உயர்வதற்கு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. கல்வி கட்டணம் கிடையாது, சீருடை, புத்தகம், எழுதுபொருட்கள், நோட்டு, மதியஉணவு இலவசம், கல்வி உதவித்தொகை போன்ற சலுகைகள் அரசுப்பள்ளிகளில் இருந்தாலும் ஆண்டுக்கு ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே தான் வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்திடும் நோக்கில் அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மூலமாகத்தான் தமிழ்வழிக்கல்வி பின்பற்றப்பட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது. இப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவதற்கு காரணம் குறித்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு கல்வித்துறை அதிகாரிகள் தலைமையிலான ஆசிரியர்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் விகிதமானது 40:1 என்ற ரீதியில் இருப்பதே கல்வியின் தரம், மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவதற்கு காரணம் என்பது நிரூபணமாகியுள்ளது.

அதாவது கடந்த 1989ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதமானது 20:1 என்ற ரீதியில் இருந்தது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க முடிந்தது. பொதுவாக ஆரம்பக்கல்வி என்பது மாணவ, மாணவியர்களுக்கு அடிப்படை கல்வியாகும். சின்னச்சிறு மாணவர்களை பக்குவப்படுத்தி அவர்களை படிக்க வைப்பது என்பது சிரமமானதாகும். இந்நிலையில் அப்போது ஆட்சியிலிருந்த திமுக, ஆசிரியர்கள், மாணவர் விகிதத்தை 40:1 ஆக மாற்றி அமைக்க ஆணை பிறப்பித்தது. ஆனால் இதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. ஆனால் அடுத்துவந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆசிரியர்களின் பலமான எதிர்ப்புகளை மீறி 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது. இதனால், தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக கணக்கீடப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர். ஆசிரியர், மாணவர் விகிதம் அதிகரித்த நிலையில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இடங்களில் தற்போது ஒருலட்சத்திற்கும் குறைவான ஆசிரியர்களே பணிபுரிகின்றனர். 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்துவது என்பது இயலாத செயலாகும்.

எனவே ஆசிரியர் மாணவர் விகிதத்தை மீண்டும் 20:1 ஆக மாற்றியமைக்கவேண்டும், இல்லாதபட்சத்தில் 30:1 ஆக மாற்றவேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர்கள் தரப்பில் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வந்தபோதும் இதுவரை பலன் இல்லை. ஏற்கனவே மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கல்வித்துறையில் பல்வேறு வகையான அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது. பிளஸ் டூ மதிப்பெண்கள் 1200ல் இருந்து 600ஆக குறைப்பு, பிளஸ் ஒன் தேர்வு பொதுத்தேர்வாக மாற்றப்பட்டது, மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ்களை ஸ்மார்ட் கார்டுகளாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படிப்பட்டசூழலில், தமிழ்வழிக்கல்வியை காப்பாற்றவும், உபரி ஆசிரியர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பலவருட கோரிக்கையாக இருந்துவரும் மாணவர்கள், ஆசிரியர் விகித்தை முன்பு இருந்ததுபோல் 20:1ஆக மாற்றி அமைத்திடவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எப்படியானாலும் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்வழி கல்வி பயிற்றுவிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் பெரும்பாலும் மூடப்பட்டுவிடும் நிலையை எட்டிவிடும். எனவே விரைவில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அரசு தாமதிக்காமல் இந்த அறிவிப்பினை வெளியிட்டு மாணவர்களின் கல்வித்தரத்தை பாதுகாத்திடுமா..? என்ற எதிர்பார்ப்பும் பெற்றோர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. இனியாவது அரசு செவி சாய்க்குமா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One