முன்னாள் மாணவர் சந்திப்பில், ஈரோடு கலெக்டர் கதிரவன், ஆசிரியர்களின் காலை தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்றார்.நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் பழையபாளையத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 1983-85ல், உயர் நிலைப்பள்ளியாக இருந்தபோது, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில், 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்தனர். அவர்கள், தற்போது பல்வேறு இடங்களில், பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், 34 ஆண்டுகளுக்கு பின், பத்தாம் வகுப்பில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், முன்னாள் மாணவ, மாணவியர், தங்கள் கணவன், மனைவி, குழந்தைகள் என, குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
1985ல், ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற சோமசுந்தரம், ரங்கசாமி, செல்லம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் மாணவரான, ஈரோடு கலெக்டர் கதிரவன் கலந்து கொண்டார். அவர், தனக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களின் காலை தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்றார். தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள், ஒவ்வொருவரும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.அப்போது, கலெக்டர் கதிரவன் பேசுகையில்,''வருங்கால மாணவர்களுக்கு, நமது முன்னேற்றம், முன்னுதாரணமாக இருக்கும்.
அதேபோல், தற்போது படிக்கும் மாணவர்கள், வருங்காலத்தில் நன்றாக படித்து, நல்ல நிலைக்கு முன்னேற வேண்டும்,'' என்றார். எல்.பி.ஜி., டேங்கர் லாரி அசோசியேசன் செயலாளர் கார்த்திக், அண்ணா பல்கலை பேராசிரியர் குமார் உள்பட முன்னாள் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதையடுத்து, அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். முன்னதாக, மறைந்த முன்னாள் ஆசிரியர்களுக்கு, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment