கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், நிகழாண்டுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என துணைவேந்தர் என்.குமார் தெரிவித்தார்.
நாமக்கல் பி.ஜி.பி. வேளாண் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 2019-20-ஆம் ஆண்டில் பி.எஸ்சி., வேளாண் பொறியியல் பாடப் பிரிவு சேர்க்கப்படுகிறது. இதில், 40 மாணவ, மாணவியருக்கு சுயநிதி பிரிவின் கீழ் சேர்க்கை நடைபெறுகிறது. இதுவரை, குமுளூர் வேளாண் கல்லூரியில் மட்டுமே இப் பாடப் பிரிவு இருந்துவந்த நிலையில், தற்போது வேளாண் பல்கலைக்கழகத்திலும் கொண்டு வரப்பட்டுள்ளது. நிகழாண்டு, மாணவ, மாணவியர் சேர்க்கை அனைத்தும் இணைய வழியிலேயே நடைபெறுகிறது.
இதுவரை, 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 6-ஆம் தேதி விண்ணப்பிக்கக் கடைசி நாளாகும். கடந்த ஆ ண்டு 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு 60 ஆயிரம் வரையில் எதிர்பார்க்கிறோம். இங்குள்ள ஏழு மையங்களில் 16 வகையான வேளாண் பாடப் பிரிவுகள் உள்ளன. இவற்றில், 4 ஆயிரம் மாணவ, மாணவியர் சேர்க்கை பெறுவர். தர வரிசைப் பட்டியல் ஜூன் மூன்றாவது வாரத்தில் வெளியாகும். இனிவரும் ஆண்டுகளில் வேளாண் கல்லூரிகளில் கூடுதல் பாடப் பிரிவுகள் உருவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில், 14 இடங்களில் பல்கலைக்கழகத்தின் கீழ் புதிய வேளாண் பயிற்சி நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment