தமிழகம் முழுவதும், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் ஆய்வு நடத்த, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. 'நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன்' என, இந்த பள்ளிகள் பல்வேறு வகைகளில் உள்ளன.நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனரகமும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித் துறை மற்றும் மெட்ரிகுலேஷன் இயக்குனரகமும் அங்கீகாரம் வழங்குகின்றன.
இதற்காக, பல்வேறு விதிமுறைகள் உள்ளன. பள்ளிக்கு தேவையான நிலம் இருக்க வேண்டும். கழிப்பறை, வகுப்பறை, குடிநீர், தீ தடுப்பு, பாதுகாப்பு வசதிகள் வேண்டும் என, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாத பள்ளிகள், சட்ட அங்கீகாரம் பெறாமல், தொடர்ந்து செயல்படுகின்றன.அதிலும் சில பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்றதாக பொய் கூறி, மாணவர்களை சேர்க்கின்றன.இது குறித்து, பள்ளி கல்வித் துறை சார்பில், மாவட்ட வாரியாக குழுக்கள் அமைத்து, ஆய்வு செய்யப்பட்டது. எந்தெந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் உள்ளது என்ற, பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், நேரடி கள ஆய்வு நடத்த, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.வரும், 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அங்கீகாரம் இன்றி மாணவர்களை சேர்த்துள்ள பள்ளிகளை மூட, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment