பள்ளிக் கல்வித் துறையில் 4,001 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ள நிலையில், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு 17பி நோட்டீஸ் அனுப்பப்பட்ட 1,564 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் பணியாற்றும் 4,001 பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறவுள்ளனர். பதவி உயர்வு வழங்கப்படும் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
தற்காலிகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை பதவி உயர்வு அளிக்க வேண்டிய பட்டியலை விட அதிகமாக உள்ளதால், பட்டியலை ஆசிரியர்களிடம் காண்பித்து அதில் பெயர் சேர்க்கை, திருத்தம் இருந்தால் சரிசெய்ய வேண்டும். அதேபோல் கல்வித் தகுதியில்லாத ஆசிரியர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருந்தால் அதை நீக்க வேண்டும். இவற்றையெல்லாம் சரிசெய்து வரையறுக்கப்பட்ட பட்டியலில் இருந்து பதவி உயர்வு பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் ஐந்தாண்டுகள் தொடர்ந்து முதுநிலை ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும்.
மேலும், கடந்த காலங்களில் பதவி உயர்வுக்கு தகுதி இருந்தும் பல்வேறு காரணங்களால் பதவி உயர்வு பெயர் பட்டியலுக்கு பரிந்துரைக்காமல் சில ஆசிரியர்கள் விடுபட்டுள்ளதாகத்
தெரியவந்துள்ளது.
வரும் காலங்களில் இதுபோன்ற புகார்கள் வராமல் இருக்க மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதவி உயர்வு பெறுவதற்கு தகுதி இருந்தும் முன்னுரிமை பட்டியலில் பெயர் சேர்க்காத சம்பந்தப்பட்ட ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல், இளங்கலை பாடத்தில் இரட்டைப் படிப்பு (Double Degree) படித்தவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்கக் கூடாது. மேலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை, விதி 17பி-இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.
எனவே அவர்களுக்கு தற்போது பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது. அதையும் மீறி, தவறாக அவர்கள் பெயரை பரிந்துரைத்தால் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment