கல்வி போதிக்கும் ஆசிரியர்களை கடவுளாகப் போற்றுகின்றனர் மாணவர்கள். குறிப்பாக, சிலருக்குஎட்டிக் காயாக கசக்கும் அறிவியல் பாடத்தையும் நேசிக்கச் செய்து, மாணவர்கள் மத்தியில் கதாநாயகனாய்த் திகழ்கிறார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கே.எஸ்.சந்திரசேகரன்.
பவானியை அடுத்த குட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 135 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இவர்களுக்கு அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் சந்திரசேகரன். கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடம் என்றாலே வேப்பங்காய் என்பதை உணர்ந்த சந்திரசேகரன், அறிவியலை அவர்களுக்குப் பிடித்த பாடமாக மாற்ற எடுத்த முயற்சிகள்தான், அவருக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளன.
“பெற்றோர் செல்லப்பன்-அம்சா இருவருமே விவசாயக் கூலிகள். கல்விதான் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையை, பள்ளி ஆசிரியர்கள் எனக்கு விதைத்தனர். இது என் மனதில் பதிந்ததால், எம்.எஸ்சி., எம்.எட்., எம்.ஃபில் வரை என்னால் கல்வியில் முன்னேற முடிந்தது. ஆசிரியர் வாரியத் தேர்வில் வெற்றி பெற்று, ஆசிரியராக தேர்வானேன்.
அறிவியல் பாடம் என்றாலே என் வகுப்பு மாணவர்கள் பலருக்கு அலர்ஜியாக இருந்ததை அறிந்தேன். அவர்களை உற்சாகப்படுத்த சில முயற்சிகளை மேற்கொண்டேன். வகுப்பறையில் மட்டும் மாணவர்களை அடைத்து வைக்காமல், ஆவின் பால் உற்பத்தியகம், மின் உற்பத்தி குறித்து அறிய பவானிசாகர், மேட்டூர் அணை, ஈரோடு புத்தகத் திருவிழா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் அறிவியல் கண்காட்சிகள் என களச் சுற்றுலா அழைத்துச் சென்றேன். இதில், மாணவர்களிடம் மாற்றம் ஏற்பட்டது. பல மாணவர்கள் தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்” என்கிறார் சந்திரசேகரன்.
அறிவியல் பாடத்தில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த, தன் சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறையை அமைத்துள்ளார். ‘யுடியூப்’ மூலம் வகுப்புகளை நடத்தவும், அறிவியல் சோதனை, செய்முறை வகுப்புகளை மாணவர்கள் பார்வையிட்டுத் தெரிந்து கொள்ளவும் வசதி செய்து கொடுத்துள்ளார்.
அறிவியல் ஆசிரியரின் இத்தகைய முயற்சிகளால், வேகமாக சுழலும்போது ஒளிக்கு நிறம் கிடையாது என்பதை ஒரு குறுந்தகடு மூலம் எளிமையாக விளக்கி, இவரது மாணவர் பிரதீப், அறிவியல் கண்காட்சியில் பரிசு பெற்றுள்ளார். இதேபோல, பல்வேறு மாணவர்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளைப் பெற்றுள்ளனர்.
மாற்றுத் திறன் கொண்ட மாணவர் தமிழரசு, இயற்கை முறையில் கொசுவிரட்டி தயாரித்து, கடந்த ஆண்டு ஜவஹர்லால் நேரு மாநில அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்றுள்ளார். அதேபோல, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர் தமிழரசு, ரூ.1 லட்சம் பரிசு பெற்றதன் பின்னணியிலும் ஆசிரியர் சந்திரசேகரனின் உழைப்பு உள்ளது.
கிராமப் பகுதியில் செயல்படும் இப்பள்ளியில் மாணவர்கள் இடைநிற்றல் தற்போது முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்களின் துணையுடன், மாணவர்களின் வீட்டுக்குச் சென்று, பெற்றோருடன் பேசி, பலரின் கல்வி தொடரவும் இவர் காரணமாக இருந்துள்ளார். கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, பள்ளி நேரம் முடிந்ததும் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறார்.
மேலும், 25 முறைக்கு மேல் ரத்த தானம், புயல் போன்ற பேரிடர் காலங்களில், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று உதவுவது என `கலக்குகிறார்’ ஆசிரியர் சந்திரசேகரன்.
No comments:
Post a Comment