மாநகராட்சி கல்வித்துறையின் சார்பில் சென்னைப் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் துணை ஆணையாளர் (கல்வி) குமாரவேல் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசியதாவது: நல்ல ஆரோக்கியமான கல்விச்சூழலை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு உருவாக்கும் வகையில் பள்ளிகளில் தரமான உட்கட்டமைப்பு, சுத்தமான குடிநீர், கழிவறைகள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை நல்ல முறையில் பராமரிப்பதை தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களின் அறிவுத்திறன், செயலாற்றல் ஆகியவற்றை ஊக்குவித்து வளரச் செய்து, அவர்களது செயல் மற்றும் சிந்திக்கும் திறனை முழு அளவில் வெளிக்கொணர வேண்டும்.மாணவர்கள் தாங்கள் கற்றவற்றை வெளியுலக நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தும் வகையில் அறிவும் ஆற்றலும் உருவாக்க வேண்டும். மாறிவரும் சூழலுக்கேற்ப தேவைகளின் அடிப்படையில் புதிய கருத்துக்களை கற்றல், கற்பித்தலில் மாறுதல் செய்ய வேண்டும். எவ்விதப்போட்டி தேர்வுகளையும், எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களின் திறனை முழுமையாக வளர்த்திட வேண்டும். மேலும், மாநகராட்சி பள்ளிகளில் தரமான கல்வியினை வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர், உதவி கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர்களை உள்ளடக்கிய வழிகாட்டுதல் குழு அமைத்து, இக்குழுவின் அறிவுரைகளின்படி அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment