கல்வி மாவட்ட அலுவலர் பதவிக்கு மூத்த தலைமையாசிரியரை நியமிக்க வேண்டும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் வலியுறுத்தல்
மாவட்ட கல்வி அலுவலர் ஓய்வு பெறும் போது, அந்த பதவிக்கு பொறுப்பு அலுவலராக மேல்நிலைப்பள்ளியின் மூத்த தலைமையாசிரியரை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக சட்டச்செயலாளர் அனந்தராமன், மாவட்டத்தலைவர் சிவக்குமார், பொதுச்செயலாளர் கந்தசாமி, பொருளாளர் பாலசுப்பிரமணி, துணைத்தலைவர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், அமைப்புச்செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட தலைமையாசிரியர்கள் நேற்று மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில், 'மதுரை கல்வி மாவட்ட அலுவலர் இம்மாதம் (நாளை) ஓய்வு பெறுகிறார். ஜூன் 1ம் தேதி முதல் அந்த பதவிக்கு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட உள்ளார். இதுவரை பின்பற்றப்பட்ட சுழற்சி முறை மற்றும் இயற்கை நியதிகளின்படி மூத்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை பொறுப்பு அலுவலராக நியமிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதுகுறித்து சங்கத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் கூறுகையில், 'மாவட்ட கல்வி அலுவலர் பதவியும், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவியும் சமமான பதவிகள் ஆகும்.
இதனால், கல்வி மாவட்ட அலுவலர்கள் ஓய்வு பெறும் போது, அந்த பதவிக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்படும். அதற்கு, மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மூத்த தலைமையாசிரியரை பொறுப்பு அலுவலராக நியமிக்க வேண்டும். இது நடைமுறையில் உள்ளது. இதனை மாற்றக்கூடாது என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். முதன்மைக்கல்வி அலுவலரும், பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்' என்றார்.
No comments:
Post a Comment