மாணவர்களுக்கான புத்தகச் சுமையை, இந்தக் கல்வியாண்டு முதல் குறைக்க, பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.தமிழகத்தில், ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கின்றன. 'விதவித வண்ணங்களில், 'ஸ்கூல்' பைகள் வந்தாலும், மாணவர்களின் புத்தகச் சுமை மட்டும் குறையவில்லை. புத்தகச் சுமை காரணமாக, மாணவர்கள் உடல்நலன் பாதிக்கப்படுகிறது' என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
'ஒன்று முதல், இரண்டாம் வகுப்பு - 1.5 கிலோ, மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு - 2 - 3 கிலோ வரை, ஆறு, ஏழாம் வகுப்பு - 4 கிலோ, எட்டு, ஒன்பதாம் வகுப்பு - 4.5 கிலோ, 10ம் வகுப்பு - 5 கிலோ அளவுக்கு புத்தகப் பையின் எடை இருக்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, கடந்த ஆண்டு உத்தரவிட்டது.இது குறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகளில் பருவ முறை அமலில் இருப்பதால், புத்தகங்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பள்ளி நிர்வாகம், அனைத்து வகுப்பு பிரிவுக்கும், சரியான பாட அட்டவணையை உருவாக்க வேண்டும்.
இதன் மூலம், அன்றைய தினம் என்ன பாடமோ, அதற்குரிய புத்தகங்களை மட்டும், மாணவர்கள் எடுத்து வருவர்.பெற்றோரும், தங்கள் குழந்தைகளிடம், அன்றாட அட்டவணைக்கான புத்தகங்களை எடுத்து செல்லும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். புத்தகத்தில் உள்ள பாடங்கள் மற்றும் எழுத வேண்டியவற்றை, 'ஒர்க் ஷீட்'டாக மாற்றுவதன் மூலம், சுமை குறையும். இது, தனியார் பள்ளிகளில் சாத்தியமே.பெரிய மேற்கோள் புத்தகங்கள், அகராதிகள், தேவையற்ற நோட்டுகளை எடுத்து வர வேண்டியதில்லை.
புத்தகங்கள், சீருடைகள் மற்றும் விளையாட்டுக் கருவிகளை வைக்க, வகுப்பறைகளில் அலமாரிகள் அமைக்கப்படலாம்.கணினிசார் கல்வி முறை, 'ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம் முழுமையாக அமலாகும்போது, புத்தகச்சுமை இன்னும் குறைந்துவிடும்.ஸ்கூல் பையை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். பள்ளிகளிலேயே, துாய்மையான குடிநீர், நொறுக்குத் தீனிகள் வழங்குவதன் மூலம், ஸ்கூல் பை சுமை குறையும்.புத்தகச் சுமையை குறைப்பது தொடர்பாக, பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
இது தொடர்பாக, விரைவில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம், சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.10 சதவீத வாகனங்களில்பாதுகாப்பு குறைபாடுகுழந்தைகளை ஏற்றிச் செல்லும், தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய, அந்தந்த மாவட்டங்களில், போக்குவரத்து, கல்வி, போலீஸ் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஒரு வாரமாக, இக்குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். அவசர கால வழி, சீட், தரைத்தளம், டிரைவர் லைசென்ஸ், வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி, தினசரி குறிப்பு புத்தகம், முதலுதவி பெட்டி உட்பட, 21 அம்சங்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளி திறப்பதற்கு முன், அனைத்து வாகனங்களின் ஆய்வும் முடிக்கப்படும். பாதுகாப்பு அம்சங்களில், ஏதேனும் குறைவாக இருந்தாலும், வாகனத்தை இயக்க அனுமதிக்கப்படாது. பாதுகாப்பு அம்சங்களை சரி செய்த பின், தடை நீக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும், 5 முதல், 10 சதவீத வாகனங்கள், பாதுகாப்பு குறைபாட்டால், இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றனர்.
பள்ளி வாகன டிரைவர்களுக்கு, விபத்து இல்லாமல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது, தீயணைப்பு துறை மூலம், தீயணைப்புக் கருவிகளை, அவசர காலத்தில் இயக்குவது குறித்து, அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வாகன நடத்துனர்களிடம், தங்கள் குழந்தைகளை போல், பள்ளி குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment