தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களின் பதவிகளை பறிக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அந்த பள்ளிகளில் இனிமேல் தலைமை ஆசிரியர்கள் என்ற பதவியே இருக்காது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 53 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் என 27 ஆயிரம் பள்ளிகள் உள்ளன
. தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த இருவகை பள்ளிகளுக்கு தலா ஒரு தலைமை ஆசிரியர் பதவிகள் உருவாக்கப்பட்டு அதில், தகுதியுள்ள நபர்கள் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். குறிப்பாக பல ஆண்டுகள் பணியாற்றி சீனியாரிட்டி உள்ளவர்களுக்கே இந்த தலைமை ஆசிரியர்கள் பதவிகள் வழங்கப்படுகிறது.
இதற்காக ஆண்டுதோறும் கவுன்சலிங் நடத்தி பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலமும், நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலமும் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இனி மேற்கண்ட தலைமை ஆசிரியர் பதவிகள் இருக்காது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் தொடக்க கல்வித்துறை இறங்கியுள்ளது.
இதன்படி, தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்படுவோர் அந்த பள்ளியின் மூத்த இடைநிலை ஆசிரியராகவே கருதப்படுவார். நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராகவே கருதப்படுவார்
. தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருப்பவர் எந்த பாடத்தில் பட்டம் பெற்றுள்ளாரோ அதே பாடத்தில் பட்டம் பெற்றவர் அந்த பள்ளியில் இருந்தால் அவர் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார். அதேபோல தொடக்க கல்வித்துறையின் கீழ் வரும் வட்டார கல்வி அதிகாரி(BEO) என்பவர் பதவியின் நிலை என்ன என்பது இன்னும் முடிவாகவில்லை.
இருப்பினும் அவர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவோ, மேற்பார்வையாளர்களாகவோ, பள்ளித் துணை ஆய்வாளர்களாகவோ நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. இலவச பொருட்களை இந்த வட்டார கல்வி அதிகாரிகள் வழங்கமாட்டார்கள். மாவட்ட கல்வி அதிகாரிகள் தான் வழங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment