புதுக்கோட்டை, நீர்நிலைகளை துார்வார 100 நாள் வேலை திட்ட ஊதியம் 10 ஆயிரம் ரூபாயை வழங்கிய மூதாட்டி ராஜம்மாளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதையடுத்து பள்ளி மாணவர்கள் இருவர் தங்களது உண்டியல் சேமிப்பு பணத்தை துார்வாரும் பணிக்கு வழங்கியுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இதையடுத்து கொத்தமங்கலம் பகுதி இளைஞர்கள் இணைந்து அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளை சொந்த செலவில் துார்வாரி வருகின்றனர்.அம்புலி ஆற்றில் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு பராமரிக்கப்படாமல் உள்ள அணையில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாய்களை சீரமைப்பதுடன் அப்பகுதியில் உள்ள குளங்களையும் துார்வாரி வருகின்றனர்.இப்பணிக்கு உதவும் பொருட்டு ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி தன் பேரக் குழந்தைகளின் கல்விக்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் 10 ஆயிரம் ரூபாயை அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ராஜம்மாள் 62 வழங்கினார்.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று ராஜம்மாள் அலைபேசி எண்ணுடன் செய்தி வெளியானது. நேற்று அதிகாலை துவங்கி இரவு வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் ராஜம்மாளை பாராட்டினர்.ராஜம்மாளை பாராட்டி அப்பகுதி இளைஞர்கள் கொத்தமங்கலம் கடை வீதியில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.பாட்டியின் செயலைப் பார்த்த ஒரு சிறுவனும் சிறுமியும் தங்களின் உண்டியல் சேமிப்பு பணத்தை துார்வாரும் பணிக்கு கொடுத்து அசத்தி உள்ளனர்.கொத்தமங்கலம் திருஞானம் - வசந்தி தம்பதியின் மகன் ஐந்தாம் வகுப்பு மாணவன் சக்திவேல் 10. இவர் தன் உண்டியலை துார்வாரும் குழு இளைஞர்களை நேற்று வீட்டிற்கு வரவழைத்து கொடுத்தார். உண்டியலை உடைத்து எண்ணியபோது 2668 ரூபாய் இருந்தது.அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் - லதா தம்பதியின் மகளான நான்காம் வகுப்பு மாணவி அனுஷ்கா 9, பணம் சேமித்து வைத்திருந்த உண்டியலை இளைஞர்களிடம் வழங்கினார். அந்த உண்டியலில் 2313 ரூபாய் இருந்தது. சிறுவர் சிறுமியரை இளைஞர்கள் பாராட்டினர்.ராஜம்மாள் கூறியதாவது:எங்கள் பகுதியில் சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இப்பகுதியில் 1000 அடிக்கு ஆழ் குழாய் அமைத்தும் தண்ணீர் இல்லை காரணம் ஆறு, குளம், நீர் நிலைகள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன.இப்பகுதி இளைஞர்கள் ஆறு குளங்களை துார்வாரி வருவதாகவும் அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் என் மகன் ஆனந்த் கூறினான்.இதைக் கேட்ட நான் 100 நாள் வேலை திட்டத்தில் சம்பாதித்த பணத்தில் 10 ஆயிரம் ரூபாயை துார்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களிடம் வழங்கினேன்.இங்குள்ள ஆறு, குளங்களை துார்வாரி தண்ணீர் சேமித்தால் என் பேரன்களும் இந்த தண்ணீரை பயன்படுத்துவர் என்பதற்காகவே சேமிப்பு பணத்தை வழங்கினேன்.இந்த செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளிவந்ததை அடுத்து பல பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரசியல்வாதிகள் நடிகர்கள் என பலர் பாராட்டி வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
இதேபோல அனைத்து பகுதிகளிலும் ஆறு, குளங்களை துார்வார இளைஞர்கள் முன்வர வேண்டும். இதில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இருக்கக்கூடாது.அரசு அரசியல்வாதிகள் செய்ய முன்வராத இந்த துார்வாரும் பணியில் ஈடுபட முன்வரும் அனைவரும் என் பேரன்கள் தான்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment