அரசு உதவி பெறும் பள்ளிகளில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பும் பணி துவங்கியுள்ளது.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ல், அமலுக்கு வந்தது. இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பணியில் சேரும் ஆசிரியர்கள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில், 2010 ஆகஸ்ட், 23ல் அறிவித்தது.
இந்த அறிவிப்பின்படி, 2010 ஆகஸ்டுக்கு பின், பணியில் சேர்ந்த, அனைத்து அரசு மற்றும் தனியார்பள்ளிகளின் ஆசிரியர்களும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டது. இதையடுத்து, தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வை எழுதி தேர்ச்சி பெற கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு, மார்ச், 31ல், அவகாசம் முடிகிறது.இடைப்பட்ட ஆண்டுகளில், நான்கு முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டதாகவும், அதில், ஏராளமான ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும், தமிழகஅரசு பட்டியல் தயாரித்துள்ளது. முதற்கட்டமாக, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத, 1,500 ஆசிரியர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்; அவர்களின், மார்ச் மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.இதையடுத்து, 1,500 ஆசிரியர்களிடமும் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்புமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, நோட்டீஸ் அனுப்பும்பணி துவங்கியுள்ளது. ஆசிரியர்களின் விளக்கத்துக்கு ஏற்ப, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment