எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

புதிய பாடத்திட்டத்தின்படி பாடங்களைப் படிக்க 220 நாள்கள் தேவை: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

Tuesday, June 4, 2019


புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட பாடங்களைப் படிப்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் 220 நாள்கள் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டே பள்ளிகள் திட்டமிட்டபடி தொடங்கப்பட்டன என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 77.48 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 8 மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்களை வழங்கி அமைச்சர் பேசியது:
மாணவர்களின் முழுமையான ஆளுமைத் திறனை வளர்த்திடவும், செயல் வழிகற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், சிந்தனைத் திறனை வெளிக்கொணரும் வகையிலான மதிப்பீட்டு முறையை உள்ளடக்கியும், உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான சவால்களை மாணவ, மாணவியர் உறுதியோடு எதிர்கொள்ளும் வகையிலும் மிகச்சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்து, புதிய பாடத் திட்டமும், பாட நூல்களும் உருவாக்கப்பட்டன.
2019-2020-ஆம் கல்வியாண்டுக்கு ரூ.195.25 கோடி செலவில் 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசால் நடத்தப்படும் எந்தப் போட்டித் தேர்வையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெறும் வகையில் இந்த புதிய பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத் திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள பாடங்களைப் படிக்க 220 நாள்கள் தேவைப்படுகிறது. அதைக் கருத்தில் கொண்டுதான் திட்டமிட்டபடி திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  மாணவ, மாணவியரின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கவும்,  அவர்கள் முழுமையாக பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதிலும் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள் முதல் நாளிலேயே வழங்கப்படும்.
பள்ளிகளில் குடிநீர் பிரச்னை இருக்காது:  பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையை முழுமையாக தீர்த்திடும் வகையில் உள்ளாட்சித் துறையுடன் பள்ளிக் கல்வித் துறை இணைந்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்றார் அமைச்சர்.
   நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், மேலாண்மை இயக்குநர் ஜெயந்தி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன்,  எஸ்சிஇஆர்டி இயக்குநர் உஷாராணி, தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One