போலந்து நாட்டில் விண்வெளி பயிற்சிக்குத் தேர்வான தேனி மாணவிக்கு 'இந்து தமிழ்' செய்தியால் ஓசையில்லாமல் உதவிகள் குவிந்து வருகின்றன. நடிகர் விஜய்சேதுபதி, அம்மாணவிக்கு ரூ.8 லட்சம் வழங்கி, மாணவியின் கனவை நனவாக்கி உள்ளார்.
தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்த தாமோதரன் மகள் உதயகீர்த்திகா. அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ் வழியில் பிளஸ் 2 படித்தார். இவருக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மீதான ஈர்ப்பால், அவரைப் போல விஞ்ஞானியாக ஆசை ஏற்பட்டது.
இஸ்ரோ சார்பில் 2012, 2014-ம்ஆண்டுகளில் நடந்த விண்வெளிஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டிகளில் இவர் மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார்.
அப்போதுஇஸ்ரோ விஞ்ஞானிகள், கீர்த்திகாவை விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமாக படிக்கும்படி ஊக்கப்படுத்தினர்.
உக்ரைன் நாட்டில் உள்ள கார்கியூ நேஷனல் ஏரோ ஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் படிக்க இடம் கிடைத்தது. இவரது குடும்ப வறுமையை அறிந்தவர்கள் கொடுத்த ஆதரவால் தற்போது அங்கு படிப்பை முடித்து 92.5 சதவீத மதிப்பெண் எடுத்துள்ளார்.
தற்போது கீர்த்திகாவுக்கு போலந்து நாட்டின் அனலாக் வானியல் பயிற்சி மையத்தில், போலந்து, நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பிற நாட்டு விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி பெறவும், அந்த நாடுகளில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெறவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பொருளாதார வசதியில்லை
சர்வதேச அளவில் 20 மாணவர்கள், இந்தப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில், இந்தியாவிலிருந்து கீர்த்திகா மட்டும் இடம் பெற்றுள்ளார். அங்கு மூன்றரை மாதம் தங்கி பயிற்சி பெற வேண்டும். ஆனால் அவரிடம் அதற்கான பொருளாதார வசதியில்லை.
இதுகுறித்து 'இந்து தமிழ்'நாளிதழில் செய்தி வெளியானது.
அந்த செய்தியைப் பார்த்து, தேனி அதிமுக எம்பி ரவீந்திரநாத்குமார் ரூ. 3 லட்சம் உதவினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் விஜய் சேதுபதி,சென்னைக்கு தனது அலுவலகத்துக்கு மாணவி உதயகீர்த்திகாவை வரவழைத்து ரூ.8 லட்சம் நிதியுதவிசெய்தார். விஜய் சேதுபதி வெளியூர் படப்பிடிப்பில் இருந்ததால், அவரது அலுவலக ஊழியர்கள், அந்தப் பணத்துக்கான காசோலையை உதய கீர்த்திக்காவிடமும், அவரதுதந்தை தாமோதரனிடமும் வழங்கினர்.
அவரிடம் விஜய் சேதுபதி செல்போனில் தொடர்பு கொண்டுவிஞ்ஞானியாக ஆவதற்கு வாழ்த்து கூறினார்.
'இந்து தமிழ்' செய்தி எதிரொலியால் ஓசையில்லாமல் குவிந்த உதவிகளால், தற்போது மாணவி உதயகீர்த்திகா தேனியிலிருந்து உற்சாகத்துடன் சாதிக்கும் ஆர்வத்தில் விண்வெளி பயிற்சிக்காக போலந்து நாட்டுக்கு புறப்பட தயாராகியுள்ளார்.
No comments:
Post a Comment