தமிழக தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன், இந்த மாத இறுதியில் (ஜூன்) ஓய்வு பெறவுள்ளார். அவர் மத்திய அரசுப் பதவியில் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவர், கிரிஜா வைத்தியநாதன். 1981-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மாநில அரசின் பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 23-இல் பொறுப்பேற்றார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தது, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சிக்கல்கள் நிலவிய சூழலில் தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பணிபுரிந்து வந்தார். தமிழக அரசின் பல்வேறு முக்கியத் திட்டங்களையும் அவர் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.
ஏழைப் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்குவது, பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் அளித்தது போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அவரது கண்காணிப்பில் செயல்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், ஓய்வு பெறும் வயதான 60 வயதை வரும் ஜூன் 30-ஆம் தேதி அவர் எட்டுகிறார். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறும் அவருக்கு மத்திய அரசில் உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்கிற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.
தலைமைச் செயலாளர் பதவிக்கு தகுதி அடிப்படையில் 14 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அதில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment