ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தன்னுடன் செஸ் விளையாடிய அரசுப் பள்ளி மாணவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தீர்க்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டுவருகிறது. இந்தப் பணிகள் குறித்து ஆய்வுசெய்வதற்காக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இன்று ராமநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.காவனூர், தெற்குத்தரவை, வைரவன் கோயில் ஆகிய கிராமங்களுக்குச் சென்றார். அங்கு, ஊராட்சி ஒன்றியத்தின்மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் தொடர்பான பணிகளை ஆய்வுசெய்த பின், ஆர்.காவனூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றார்.
அங்கு, மாணவர்கள் கோ-கோ விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர், உங்கள் பள்ளியில் என்னென்ன விளையாட்டு சொல்லித் தரப்படுகிறது எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த மாணவர்கள், தங்கள் பள்ளியில் செஸ், கேரம் உள்ளிட்ட விளையாட்டுகள் சொல்லித் தரப்படுவதாகக் கூறினர். இதையடுத்து, செஸ் யாருக்கு விளையாடத் தெரியும் எனக் கேட்ட ஆட்சியரிடம், சில மாணவர்கள் கைகளை உயர்த்தி தங்களுக்கு செஸ் விளையாடத் தெரியும் என்றனர்.
இதையடுத்து, அப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன் ஜீவாவுடன் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் சிறிது நேரம் செஸ் விளையாடினார். அப்போது, தனக்கு ஈடுகொடுக்கும் வகையில் விளையாடி திறமையை வெளிப்படுத்திய மாணவன் ஜீவாவைப் பாராட்டி உற்சாகப்படுத்திய மாவட்ட ஆட்சியர், அனைத்து மாணவர்களும் கல்வியுடன் விளையாட்டையும் நல்ல முறையில் பயின்று சாதனை படைக்க வேண்டும் என வாழ்த்திச்சென்றார்.
No comments:
Post a Comment