தமிழகம் முழுவதும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு குழந்தைகள் திங்கள்கிழமை ஆர்வத்துடன் வந்தனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக மழலையர் வகுப்புகளைத் தொடங்க அரசு முடிவு செய்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளுக்கு குழந்தைகள் சீருடை அணிந்தபடி ஆர்வத்துடன் வருகை தந்தனர். முதல்நாள் என்பதால் பெரும்பாலான குழந்தைகள் அழுது அடம்பிடித்தபடி அங்கன்வாடி மையத்துக்கு வந்தன. அங்கு குழந்தைகளின் செயல்வழிக் கற்றலுக்குத் தேவையான உபகரணங்கள், விளையாட்டுப் பொருள்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன.
எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் இருந்த சுவர்களில் விதவிதமான உருவங்களுடன் ஆங்கில எழுத்துகள், எண்கள் கொண்ட படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. இதையடுத்து, அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மழலையர்களுக்கு தமிழ், ஆங்கில பாடல்களைக் கற்றுக் கொடுத்தனர்.
இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர் கூறியது:
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டிருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் நிலையில் தேவையான சீருடைகள், கல்வி உபகரணங்களுடன் எந்தவித கட்டணமும் இல்லாமல் குழந்தைகளைச் சேர்த்திருப்பதற்கு தமிழக அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதே நேரத்தில், இந்தத் திட்டம் பெயரளவுக்கு மட்டுமல்லாமல் மேலும் மெருகூட்டப்பட்டு, ஆங்கிலம் கற்பித்தலில் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளில் பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். இதுகுறித்த தகவல் அனைத்துத் தரப்பு மக்களையும் எட்டியுள்ளதால், அடுத்து வரும் நாள்களில் அதிகளவிலான குழந்தைகள் சேர வாய்ப்புள்ளது. அனைத்து மையங்களின் முன்பும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளின் சிறப்பம்சங்கள் குறித்த விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சோதனை முறையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என்றனர்.
No comments:
Post a Comment