* அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும்
* கல்வி அமைச்சர் தகவல்
சென்னை: 1 கி.மீட்டர் சுற்றளவுக்குள் அரசு பள்ளிகள் இருக்கும் இடத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கை அனுமதி வழங்குவதில்லை என்றும், ஆலோசனை நடந்து வருவதாகவும், அமைச்சரவையில் முடிவு எடுத்து விரைவில் அறிவிப்போம் என்று பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டசபையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் காஞ்சிபுரம் எழிலரசன் (திமுக) பேசியதாவது: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 1 கி.மீ சுற்றளவில் கி.மீ சுற்றளவுக்குள் அரசு பள்ளிகள் இருந்தால் தனியார் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது.
ஆனால், அரசு பள்ளி இருக்கும் பகுதியில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கின்றனர். இப்படி செய்வது அரசு பள்ளிகளை மூடுவது போல் ஆகி விடும். எனவே, இதில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன் : உறுப்பினர் நல்ல ஆலோசனை வழங்கி இருக்கிறார். அரசு பள்ளிகள் அமைந்துள்ள 1 கி.மீ சுற்றளவு பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க கூடாது என்று கர்நாடக மாநில அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். அதே போன்று தமிழகத்தில் சட்டமாக்குவது தொடர்பாக முதல்வர் பரிசீலித்து வருகிறார். இது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு எடுத்து அவையில் அறிவிப்பு வெளியிடப்படும்.
எம்எல்ஏ எழிலரசன் (திமுக) : ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது 1,355 பேர் மீது வழக்குகள் போடப்பட்டு இருக்கிறது. இதில், 127 பேராசிரியர்கள் மீதும், 208 அரசு ஊழியர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 17 பி விதியின் கீழ், 4286 ஆசிரியர்கள் மீதும், 752 அரசு ஊழியர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர 1,584 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அரசு போராட்ட குழுவுடன் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.வரும் 8ம் தேதி பணியிட மாற்ற கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அதில், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அவர்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாகும். எனவே, அரசு எந்த நிபந்தனையும் இல்லாமல் அவர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும்.தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் மாநில உரிமைகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் : தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை தொடர்பாக எங்களது முடிவை தெளிவுபடுத்தியுள்ளோம். என்னென்ன மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கல்விக்கொள்கை தற்போதே அமல்படுத்துவது போன்று பேசுவது தவறு. இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment