''அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக சரளமாக ஆங்கிலத்தில் பேச, 2000 ஆங்கில வார்த்தைகள் தேர்வுசெய்யப்படும்'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
விருதுநகரில் நடந்த கல்வித்திருவிழாவில் செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 117-வது பிறந்த நாளையொட்டி, விருதுநகரில் கல்வித்திருவிழா நடைபெற்றது
இதில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ``தமிழக அரசு பல்வேறு கல்வித் திட்டங்களைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. 2017-18-ல் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு இன்னும் மூன்று மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்புக்கான வகுப்பறைகள் செப்டம்பர் மாதத்திற்குள் கணினி மயமாக்கப்படும். விரைவில், 25 லட்சம் மாணவர்களுக்கு டேப் என்ற சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. 2 மாதத்தில் அதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்படும். அதன் பின்னர், 10 ஆண்டுகள் அந்த மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தை நோக்கி செல்வதற்காக, புதிய கல்விக் கொள்கையை மக்களுக்கு எடுத்துச்செல்வதற்கு உறுதுணையாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கல்வித்திருவிழாவில் செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி
அடித்தட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எதிர்காலத்தில், மாணவர்கள் படிக்கும்போதே சரளமாக ஆங்கிலத்தில் பேச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதற்கென பிரத்யேகமாக 2000 ஆங்கில வார்த்தைகளைத் தேர்வுசெய்து, மென்பொருள்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும். இதன்மூலம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலம் பேசக்கூடிய மாணவர்களை உருவாக்க முடியும். எனவே, வேலை தேடி பிற மாநிலங்களுக்கும் பிற நாடுகளுக்கும் செல்லும் மாணவர்கள், சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியும் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment