மாணவர்களின் கண் பார்வை திறனை பாதிக்கும் என்பதால் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு
குறையாத அளவில் எழுத வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவ்வப்போது அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறிவுரைப்படி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் விபரம் வருமாறு:
ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் கரும்பலகையில் எழுதும்போது எழுத்தின் அளவு 3 முதல் 4 சென்டி மீட்டர் அளவில் அல்லது அதற்கு மேல் இருப்பது அவசியம். அவ்வாறு இருந்தால் குழந்தைகள் வகுப்பறையின் எந்த இடத்தில் அமர்ந்திருந்தாலும் அது அவர்களின் பார்வை சார்ந்த சிரமங்களை குறைக்கும். மேலும் கரும்பலகையின் ஓரங்களில் எழுத்து அளவு குறியீடு (ஸ்டென்சில் மார்க்கிங்) அமைத்துக்கொண்டு எழுதுவது, ஆசிரியர்கள் தொடர்ந்து ஒரே அளவில் எழுத உதவியாக இருக்கும்.
கண் சார்ந்த பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் பாதிப்பு உள்ள குழந்ைதகளை வகுப்பில் முதல் வரிசையில் அமர வைக்க வேண்டும். வகுப்பறையில் எப்போதும் ஒரே சீரான வெளிச்சம் இருக்க வேண்டும். மேலும் கரும்பலகை ஒளியை பிரதிபலிப்பதாகவும், பார்க்க சிரமமூட்டுவதாகவும் இருக்க கூடாது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment