தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளுக்கு போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மடிக்கணினிகளை தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் டெண்டர் முடிந்து விட்டதால், கடந்த 2017-18-ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர், மீண்டும் டெண்டர் விடப்பட்டு தற்போது பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ( கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்) மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மாணவ, மாணவிகள் 15 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அந்தந்த மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் மடிக்கணினிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், மடிக்கணினிகள் வழங்கவில்லை என்று பல மாவட்டங்களில் மாணவ, மாணவிகள் படித்த பள்ளிகளின் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மடிக்கணினிகளின் எண்ணிக்கை விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்கள் சரி பார்க்க வேண்டும். மேலும் பெறப்படும் மடிக்கணினிகளை காவல்துறை உதவியுடன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள அந்தந்த தலைமையாசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.
இரவுக் காவலர் இல்லாத பள்ளிகளுக்கு அருகிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இரவுக் காவலரை மாற்றுப்பணியில் பணியமர்த்தி ஆணை வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், மாற்றுப்பணி விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment