திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசு தொடக்கப்பள்ளியின் கட்டிடங்களை சொந்த செலவில் வர்ணம் பூசி அழகுப்படுத்தியுள்ளனர் சில வெளிநாட்டு கல்லூரி மாணவர்கள். அது பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. ஆரணியை அடுத்த இந்திரவனம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பாழடைந்து காணப்பட்ட இப்பள்ளியின் கட்டிடங்கள் தற்போது புதுப் பொலிவுடன் காணப்படுகின்றன.
நன்றி மையம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் அயர்லாந்து நாட்டில் இருந்து இந்திரவனம் கிராமத்திற்கு கலாச்சாரப் பண்பாடுகளை கற்க வந்த 13 கல்லூரி மாணவர்கள், சுமார் நான்கு லட்சம் ரூபாய் சொந்த செலவில் பள்ளி கட்டிடங்களை உயிர்பித்து தந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக இந்திரவனத்தில் முகாமிட்டு இயற்கை விவசாய முறைகள், கிராம பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றை கற்று வந்த வெளிநாட்டு மாணவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று அங்குள்ள தொடக்கப் பள்ளியின் வகுப்பறை, சமயலறை, சுற்றுசுவர்களை சுத்தம் செய்து வர்ணம் பூசியுள்ளனர். ஒரு புறம் பள்ளியில் வர்ணம் பூசும் வேலை மறுப்புறம் இயற்கை விவசாய முறைகளை கற்பித்தல் என விறுவிறுப்புடன் செயல்பட்டு வந்த வெளிநாட்டு மாணவர்கள், மாலை நேரங்களில் சுற்றுவட்டார கிராம மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மூலம் வீட்டுப்பாடங்களை ஆங்கில முறையில் விளக்கம் அளித்தும் வந்தனர்.
அதுமட்டுமல்லாது கால்நடை நடமாட்டத்தை தடுக்கும் வகையில் பள்ளியின் முன்புறத்தில் புதிதாக சுற்றுசுவருடன் கேட் அமைத்து, கட்டிடங்கள் அழகுறும் வகையில் விதவிதமான ஓவியங்களும் வெளிநாட்டு மாணவர்களால் தீட்டப்பட்டுள்ளன.அயர்லாந்தில் இருந்து கலாச்சாரப் பண்பாடுகளை கற்க வந்த வெளிநாட்டு மாணவர்களின் இம்முயற்சியால், பாழடைந்து காணப்பட்டு வந்த அரசு தொடக்கப்பள்ளி, தற்போது உயிர்பெற்று வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. முன் பின் தெரியாத கிராமத்திற்கு வந்து சொந்த செலவில் பள்ளி கட்டிடங்களுக்கு வர்ணம் பூசிய வெளிநாட்டு கல்லூரி மாணவர்கள், இந்திரவனம் கிராமத்தினரின் விவசாய முறைகள், கலாச்சார பண்பாடுகளை கற்றறிந்ததோடு, அவர்களின் பாராட்டுகளை சேர்த்தே பெற்று சென்றனர்.

No comments:
Post a Comment