எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

செய்திகள் வாசிப்பது...! அரசு பள்ளி மாணவர்கள்...அன்னூரில் ஒரு 'அடடே' பள்ளி

Monday, July 29, 2019


அன்னுாரிலுள்ள ஒரு கிராமப்புற அரசு துவக்கப்பள்ளியில் ஆசிரியரின் கற்பிக்கும் புதிய யுக்தி, மாணவர்களையும், பெற்றோரையும் கவர்ந்துள்ளது.அன்னுாரை அடுத்த அல்லப்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் நுழையும் போது, 'பிரிட்டனில் புதிய அமைச்சரவையில், இந்திய வம்சாவளியினர் மூவர் அமைச்சர்களாகியுள்ளனர், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இருநாட்களுக்கு மிதமான மழை பெய்யும்' என செய்திகளை ஆர்வமாக வாசிக்கும் மாணவர்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றனர்.அன்னுாரிலிருந்து, எட்டு கி.மீ., தொலைவில் உள்ள அல்லப்பாளையம் சிறு கிராமம். இந்த கிராமத்திலுள்ள அரசு துவக்கப்பள்ளி அன்னுார் ஒன்றியத்திலுள்ள அனைத்து பள்ளிகளையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.இப்பள்ளியில், 31 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

காலை இறைவழிபாட்டு கூட்டத்தில், அன்றைய செய்தி தாளின் முக்கிய செய்திகள் வாசிக்கப்படுகிறது. அடுத்து, பாட வேளையில், ஒவ்வொரு மாணவ, மாணவியரும், அன்றைய செய்திதாளில் இருந்து ஒரு செய்தியை சொல்ல வேண்டும். இத்துடன், பள்ளி ஆசிரியர் பாக்கியராஜ், அன்றைய முக்கிய செய்திகளை வீட்டில் வைத்து வீடியோவாக உருவாக்கி, அதை பள்ளியில் 'லேப் டாப்' மூலம் காண்பிக்கிறார்.இத்துடன் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் போதும், அதற்கு மாணவர்கள் அளிக்கும் பதிலையும், வீடியோவாக்கி அதை 'லேப் டாப்'பில் காண்பிக்கிறார். மாணவர்களின் பெற்றோரில், 21 பேர் ஆண்ட்ராய்டு மொபைல் வைத்துள்ளனர்.

அவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் வீட்டு பாடங்களை அனுப்புகிறார். கற்பிக்கும் பாடங்கள் அடங்கிய வீடியோக்களை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ள 'வாட்ஸ் ஆப்' குரூப்புக்கு அனுப்புகிறார். அதை பல பள்ளிகள் தங்கள் வகுப்புகளுக்கு பயன்படுத்துகின்றனர்.இதுகுறித்து ஆசிரியர் பாக்கியராஜ் கூறியதாவது :மாணவர்கள் நாளிதழ் படிப்பதன் வாயிலாக, வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளேன். பாடங்களை வீடியோக்களில் பதிவு செய்து காண்பிக்கும்போது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுகிறது.

மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை வீடியோவாக்கி காண்பிப்பதால் கற்றலில் அதிக ஈடுபாடு ஏற்படுகிறது.ஸ்போக்கன் இங்கிலீஸ் வகுப்பினால், தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு இணையாக இங்குள்ள நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கில அறிவு பெற்றுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், 20 மாணவர்கள் மட்டும் கற்று வந்த இப்பள்ளியில் தற்போது, 31 பேர் படிக்கின்றனர். இருவாரங்களுக்கு முன் ஆய்வுக்கு வந்த முதன்மை கல்வி அலுவலர் அலுவலக குழுவினர் பாராட்டி, இச்செயல்பாட்டை பிற பள்ளிகளுக்கும் பரிந்துரைத்தனர்.இவ்வாறு ஆசிரியர் தெரிவித்தார்.பெற்றோர் கூறுகையில்,''எங்கள் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்தவுடன் ஆர்வமாக வீட்டு பாடம் எழுதுகின்றனர். தினசரி பத்திரிகைளை வாசிக்கின்றனர். குழந்தைகளின் நடவடிக்கையில் நல்ல மாற்றம் தெரிகிறது,' என்றனர்.கோவை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வரும் நிலையில் கற்றலில் புதிய யுக்தியை பின்பற்றும் இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறையவில்லை என்பது மகிழ்ச்சி தருகிறது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One