எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

முதல்முறையாக அரசு பள்ளியில் சிசிடிவி: சொந்த செலவில் நவீனமாக்கிய முன்னாள் மாணவிகள்

Tuesday, July 2, 2019




புதுச்சேரியில் முதல்முறையாக அரசு பள்ளியில் சிசிடிவி கேமராக்கள், சிறப்பிடம் பெறும் மாணவிகளுக்கு உதவ அறக்கட்டளை நிதி, ஸ்மார்ட் போர்டுகள், கணினி, ஏசி என ரூ. 10 லட்சம் வரை உதவியுள்ளனர் முன்னாள் மாணவிகள். தாங்கள் படித்த அரசு பள்ளிக்கு 75 வயதானதையொட்டி தங்கள் நன்றியை மெய்ப்பித்து தற்போதைய குழந்தைகள் பயன்பெற நடைமுறைப்படுத்தியுள்ளனர். புதுச்சேரி நகரப்பகுதியிலுள்ள திருவள்ளுவர் பெண்கள் மேனிலைப்பள்ளி கடந்த 1943-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பள்ளிக்கு 75 வயதாவதையொட்டி முன்னாள் மாணவிகள் இணைந்து முன்னாள் மாணவிகள் சங்கத்தை கடந்த ஆண்டு இறுதியில் உருவாக்கினர். அரசு பள்ளியில் படித்த மாணவிகள் பல்வேறு உயர் பொறுப்புகளில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஒருங்கிணைந்தனர். பள்ளிக்கு தேவையான பல வசதிகளை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும் தற்போது சாத்தியமாக்கியுள்ளனர்.

திருவள்ளுவர் அரசு பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவிகள் படிப்பு வசதிக்காக இரண்டு ஸ்மார்ட் போர்டுகள், எல்சிடி ப்ரொஜெக்டர் இரண்டும் தந்துள்ளனர். அத்துடன் பாதுகாப்பு வசதிக்காக சிசிடிவி கேமராக்கள் எட்டு பொருத்தியுள்ளனர். அதை பார்வையிடும் வசதியை தலைமையாசிரியருக்கு தரப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டாலும் தொடர்ந்து மின் வசதிக்காக இன்வெர்ட்டர், எல்இடி டிவி, கம்ப்யூட்டர் பிரிண்டர், ஏசி ஒன்று என பல வசதிகளை உருவாக்கி தந்துள்ளனர். அத்துடன் குழந்தைகள் அமரும் பெஞ்ச், டெஸ்க்களை வர்ணம் பூசியுள்ளனர்.


விழா நடக்கும் போது குழந்தைகள் அமர 350 நாற்காலிகள், ஆடியோ சிஸ்டம், விளையாட்டு சாதனங்கள், அலமாரிகள் என பல விசயங்களை பார்த்து, பார்த்து செய்து தந்துள்ளனர். அரசு பள்ளியான இங்கு படித்து ஆட்சியர், மருத்துவர், பொறியாளர், கல்லூரி பேராசிரியர், அரசு அதிகாரிகள் என பல்வேறு துறைகளில் பணியாற்றும் 400-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் ஒருங்கிணைந்து இவ்வுதவியை செய்துள்ளனர். முன்னாள் மாணவிகளின் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் கல்பனா கூறுகையில், "அரசு பள்ளியில் படித்துதான் ஏராளமான பெண்கள் முன்னேறியுள்ளோம். பள்ளிக்கு 75 வயதாவதையொட்டி சங்கம் தொடங்கி இணையத்தொடங்கினோம். 75 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணியாற்றும் 300 ஆசிரியர்களை விழா நடத்தி கவுரவித்தோம். நிதி திரட்டி பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான ஸ்மார்ட்போர்டு தொடங்கி தேவையான விஷயங்களையும் ரூ.10 லட்சத்தில் செய்துள்ளோம். பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெறுவோருக்கு பரிசு தரவும், படிக்கும் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு உதவ அறக்கட்டளை துவங்கி அதில் ரூ. 1.5 லட்சம் வரை நிதி வைத்து பள்ளியிடம் ஒப்படைத்துள்ளோம். நாங்கள் படித்த பள்ளியில் இப்போது படிக்கும் குழந்தைகளின் நலன் சார்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டார்.


பள்ளி துணை முதல்வரும், சங்கத்தின் கவுரவ தலைவருமான செல்வசவுந்தரி கூறுகையில், "கடந்தாண்டு இறுதியில் முன்னாள் மாணவிகள் சங்கத்தை அமைத்து நடப்பாண்டு ஜனவரியில் 75-வது ஆண்டு விழாவை நடத்தினர். அதையடுத்து பள்ளிக்கு தேவையானவற்றை ஆறு மாதங்களில் செய்து முடித்துள்ளனர். குறிப்பாக புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் முதலாவதாக 8 சிசிடிவி கேமராக்கள் இங்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனால் எளிதாக பள்ளி முழுக்க கண்காணிக்க முடிகிறது. வீட்டுக்கு சென்றாலும் என் மொபைல் மூலமாகவும் பள்ளி வளாகத்தை கண்காணிக்கலாம். அத்துடன் ஸ்மார்ட் போர்டு மூலம் பொதுத்தேர்வு மாணவிகளுக்கு பாடம் நடத்தும்போது அவர்களின் திறன் மேம்பட உதவுகிறது. 75 ஆண்டையொட்டி ஆசிரியர்களை கவுரவித்ததுடன் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான விஷயங்களை ஆறு மாதங்களில் செய்து முடித்து முன்னாள் மாணவிகள் முன்மாதிரியானவர்கள் ஆகியுள்ளனர்" என்கிறார் உற்சாகமாக.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One