நிலவில் சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7-ஆம் தேதி தரையிறங்குவதை பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி பிரதமர் மோடியுடன் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவதற்கான விநாடி- வினா போட்டியில் பங்கேற்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சார்பில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை, புவி சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்தது. பின்னர் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது.
பின்னர் நிலவின் சுற்றுப் பாதைக்குள் விண்கலம் கடந்த 20-ஆம் தேதி வெற்றிகரமாக நுழைக்கப்பட்டது. அடுத்த நாளான புதன்கிழமை சுற்றுப்பாதையை குறைக்கும் நடவடிக்கையையும் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர். இதன் மூலம் விண்கலம் தற்போது நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 118 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 4,412 கி.மீ. தொலைவிலான நீள்வட்டப் பாதையில் நிலவைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது.
தொடர்ந்து செப்டம்பர் 1-ஆம் தேதி வரை மேலும் 2 முறை சுற்றுவட்டப் பாதை அளவு குறைக்கப்பட்டு இறுதியாக நிலவின் பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் சுற்றிவரும் வகையில் நிறுத்தப்படும். பின்னர் செப்டம்பர் 2-ஆம் தேதி ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் அமைப்பு பிரித்துவிடப்படும். அவ்வாறு பிரித்துவிடப்பட்ட பின்னர் மேலும் 2 முறை சுற்றுப்பாதை குறைக்கப்பட்டு, செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை நிலவின் பரப்பில் மெதுவாக லேண்டர் தரையிறக்கப்பட உள்ளது.
விநாடி- வினா போட்டி: இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனை நிகழ்வை பெங்களூருவில் உள்ள தரைக் காட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட உள்ளார். பிரதமருடன் சேர்ந்து இந்த நிகழ்வை பொதுமக்களும் பார்ப்பதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் விநாடி- வினா போட்டியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக கடந்த 20-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. தற்போது இந்த காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற சனிக்கிழமை (ஆகஸ்ட் 25) வரை https://quiz.mygov.in என்ற வலைதளம் மூலம் இந்த விநாடி- வினா போட்டியில் பங்கேற்கலாம். இந்தப் போட்டியில் 20 கேள்விகளுக்கு 5 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment