ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமான வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணமாக புதிய வருமான அடுக்குகளை நேரடி வரி தொடர்பான பணிக்குழு பரிந்துரைத்து உள்ளது.
பதிவு: ஆகஸ்ட் 29, 2019 12:10 PM
புதுடெல்லி
ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளவர்களுக்கு, வருமான வரி விகிதத்தை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைப்பது, வரி விதிப்பு அடுக்குகளை நான்கில் இருந்து 5ஆக உயர்த்துவது உள்ளிட்ட பரிந்துரைகளை, நேரடி வரி விதிப்பு முறை தொடர்பான ஆய்வுக்குழு மத்திய அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தி, நாட்டின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப, புதிய சட்டத்தை இயற்றுவது குறித்து பரிந்துரைப்பதற்காக, நேரடி வரி தொடர்பான பணிக்குழு கடந்த 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ஆய்வுக்குழு, கடந்த வாரத்தில் மத்திய அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில், வருமான வரி விதிப்பு அடுக்குகளை நான்கிலிருந்து ஐந்தாக உயர்த்தவும், சில அடுக்குகளுக்கு வருமான வரி விகிதத்தை குறைக்குமாறும் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, வருமான வரி விதிக்கப்படுவதில்லை. இந்த முதல் அடுக்கில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது, 2.5 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, 5 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது.
இந்த இரண்டாவது அடுக்கை, 2.5 லட்ச ரூபாயில் இருந்து 10 லட்ச ரூபாய் வரை விரிவுபடுத்துமாறும், வருமான வரி விகிதத்தை 10 சதவீதமாக நிர்ணயிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அடுக்கிற்கு 10 சதவீத வரி விகிதம் நிர்ணயித்தாலும், 5 லட்ச ரூபாய் வரை, ஏற்கெனவே உள்ள வரிக் கழிவுகளை முழுமையாக அளிக்குமாறும், இதன் மூலம் 5 லட்ச ரூபாய் வரை ஈட்டுபவர்களுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படுத்துமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
5 லட்ச ரூபாயிலிருந்து 10 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு தற்போது 20 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், அதை 10 சதவீதமாக மாற்றுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த அடுக்கின் உயர்பிரிவில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் ஆண்டுக்கு 37 ஆயிரத்து 500 ரூபாய் மிச்சமாகும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
10 லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு தற்போது 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதை மேலும் இரண்டு அடுக்குகளாக பிரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 10 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டுபவர்கள் என மூன்றாவது அடுக்கை ஏற்படுத்தி, வரி விதிப்பை 20 சதவீதமாகக் குறைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாவது அடுக்கில் உயர்பிரிவில் இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் வரை மிச்சமாகும். இதற்கடுத்தபடியாக, 20 லட்ச ரூபாய் முதல் 2 கோடி ரூபாய்க்குள் வருமானம் உள்ளவர்களை 4ஆவது அடுக்காக நிர்ணயித்து 30 சதவீத வரியும், 2 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களை 5ஆவது அடுக்காக நிர்ணயித்து 35 சதவீத வரியும் விதிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள முறையில் இவர்கள் அனைவரும் 30 சதவீத வரி செலுத்தும் நிலையில், 4 மற்றும் 5 என மேலும் இரண்டு அடுக்குகளாக பிரிக்கும்போது, 2 கோடி ரூபாய்க்குள் ஈட்டுபவர்களுக்கு ஆண்டுக்கு 8.5 லட்ச ரூபாய் மிச்சமாகும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இவை அனைத்தும் மேல் வரி விதிப்பை கணக்கில் எடுக்காமல் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளாகும். தற்போது ஆண்டுக்கு 2.5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு மேல் வரிகளையும் சேர்க்கும்போது, 42.7 சதவீத வரி விதிக்கப்படுகிறது. எனவே, ஆய்வுக் குழுவின் பரிந்துரைகள் ஒருவேளை ஏற்கப்பட்டால், அப்போது மேல் வரிகள் விதிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா என்பதைப் பொறுத்தே வரி விகிதத்தின் அளவை கணக்கிட முடியும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் இந்த பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் வருவாயை விரிவுபடுத்துவதற்கான வழிகளை அரசு ஆராய்ந்து வரும் நிலையில், இந்த பரிந்துரைகளை அரசு ஏற்குமா என்பது சந்தேகமே என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், வரி விதிப்பை சிறிய அளவில் குறைத்துக்கொண்டாலும், அந்த பணம் தனிநபரில் கையில் மீதமாகி, செலவிடப்படும்போது, பொருள்களுக்கான கிராக்கியை அதிகரிக்கும் என்றும், இது உற்பத்தியை அதிகரிக்கச் செய்து பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த பரிந்துரைகளை அமல்படுத்தும்போது, நேரடியாக 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி வருவாய் குறையும் என்றாலும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போது அது இந்த இழப்பு மறைமுகமாக எளிதில் சரிக்கட்டி விடும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வரி விகிதம் மிக அதிகமாக இருக்கும்போது, அரசுக்கான ஒட்டுமொத்த வரி வருவாயை குறைக்கும் என்பது, ரீகன் ஆட்சிக் காலத்தில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்த ஆர்ட் லாஃபர் என்ற அமெரிக்க பொருளாதார அறிஞரின் கருத்தாகும்.
வரி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது, எவ்வளவு சம்பாதித்தாலும் அரசுக்கு வரி வடிவில் கட்ட வேண்டியிருக்கும் என்பதால், மேலும் மேலும் பொருளீட்ட வேண்டும் என்ற ஊக்கம் குறைந்துபோகும் என்று அவர் கூறுகிறார். மேலும் மேலும் சம்பாதிப்பது என்பதற்கு பதிலாக வருவாய் அளவோடு இருந்தாலும் தரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் தனிநபர்களின் கவனம் சென்றுவிடும் என்றும், இது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை பாதித்து, அரசின் வரி வருவாய் குறைவதற்கே வழிவகுக்கும் என்பது ஆர்ட் லாஃபரின் வாதமாகும். இந்த கருத்தையும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருமான வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
நேரடி வரி தொடர்பான பணிக்குழு தற்போதைய வருமான வரி அடுக்கு
ரூ.2.5 லட்சம் வரை வரி கிடையாது
ரூ.2.5 லட்சம் முதல் - ரூ.5 லட்சம் வரை வரிச்சலுகை
ரூ.2.5 லட்சம் முதல் - ரூ.10 லட்சம் வரை 10% வரி
ரூ.10. லட்சம் முதல் - ரூ.20 லட்சம் வரை 20% வரி
ரூ.20 லட்சம் முதல் - ரூ.2.கோடி வரை 30% வரி
ரூ.2 கோடிக்கு மேல் - 35 % வரி
தற்போதைய வருமான வரி அடுக்கு
ரூ.2.5 லட்சம் வரை - வரி கிடையாது
ரூ.2.5 லட்சம் முதல் - ரூ.5 லட்சம் வரை 5% வரி
ரூ.5 லட்சம் முதல் - ரூ.10 லட்சம் வரை 20 % + 12,500 வரி
ரூ.10. லட்சம் மேல் - 30 % + 1,12,500 வரி
No comments:
Post a Comment