தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட பாடநூல்களில் உள்ள தவறுகளைக் கண்டறிந்து ஆசிரியர்களிடம் நேரடியாகக் கருத்துக் கேட்டு அதனை நீக்குவதற்கு மாநில கல்வியியல் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பாடநூல்கள் புதிதாக மாற்றி எழுதப்பட்டு நிகழ் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்தப் பாடநூல்களில் பல்வேறு எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகள் உள்ளன என கல்வியாளர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்தப் புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்து தவறுகள் உறுதி செய்யப்பட்டதும்,அவற்றை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சரிசெய்து வருகிறது. இந்த நிலையில், பாடநூல்களில் உள்ள அனைத்து தவறுகளையும் களைந்து மாணவர்கள் எளிதில் பாடங்களைப் படிக்கும் வகையில் கடினமான சொற்களை நீக்கவும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றி வரும் முதுநிலை விரிவுரையாளர்கள், இளநிலை விரிவுரையாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்களிடம் புதிய பாடப் புத்தகத்தில் உள்ள கடினமான பகுதிகள், பிழைகளை எழுதிப் பெற வேண்டும்.
அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்: பாடநூல்கள் குறித்து பாடங்களை நடத்தும் ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்கும்போது பத்தி, தொடர் சொல், எழுத்து, பாட கருத்து ஆகியவற்றில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் அவற்றை வகுப்பு பாடம், அலகு பாடப்பகுதி, பாடப்பொருள் என வரிசையாக குறிப்பிட்டு அட்டவணைப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இதையடுத்து பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் பாடநூல்கள் எழுதிய வல்லுநர் குழு, ஆசிரியர்கள் ஆகியோருடன் ஆலோசிக்கப்பட்டு தேவையான கருத்துக்கள் திருத்தம் செய்யப்படும். இனி வரும் கல்வியாண்டுகளில் பிழையின்றி பாடநூல்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment