மதுரையை அடுத்த கள்ளந்திரியைச் சேர்ந்தவர் ஜாபர் உசேன். அந்தப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தான்யா தஷ்னம் (வயது 15). இவர் மதுரையில் உள்ள மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் சிக்கந்தர் ஜாபர், அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
தான்யா தஷ்னம் அறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் தீவிர ரசிகையான தான்யா தஷ்னம் விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவோடு அறிவியல் பாடத்தை ஆர்வத்தோடு படித்து வருகிறார்.
அவருக்கு பிடித்த பாடமும் அறிவியல் என்பதால் www.go4guru.com என்ற வலைதளம் மூலம் நடத்தப்படும் சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் சிறப்பாக பங்கேற்ற தான்யா தஷ்னம் உள்ளிட்ட 3 பேர் வெற்றி பெற்றனர். ஆந்திராவைச் சேர்ந்த மாணவி சாய்புஜிதா, மகாராஷ்டிராவை சேர்ந்த மாணவர் அலிபக் ஆகியோரும் விண்வெளி மையமான நாசா செல்லும் வாய்ப்பை பெற்றனர்.
நாசா
தான்யா தஷ்னம் உள்ளிட்ட 3 பேரும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமெரிக்கா சென்று விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் ஒருவாரம் தங்கி இருக்கிறார்கள். அங்குள்ள ஆய்வகத்தை சுற்றிப்பார்க்கும் இவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்கள்.
இவர்களுக்கான விமான டிக்கெட் மற்றும் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாசா ஆய்வு மையத்தின் ஓய்வு பெற்ற விண்வெளி வீரர் டான்தாமஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நாசா செல்லும் வாய்ப்பை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒரே மாணவி மதுரை கள்ளந்திரியைச் சேர்ந்த தான்யா தஷ்னம் கூறியதாவது:
எனக்கு சிறு வயதில் இருந்தே அறிவியல் பாடம் என்றால் மிகவும் விருப்பம். 5-வது படிக்கும்போதே விஞ்ஞானியாக வேண்டும். அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த கனவு 10-வது படிக்கும் இந்த நேரத்தில் கிடைத்துள்ளது. அளவற்ற மகிழ்ச்சியை தந்துள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தான் எனது உத்வேகம். அவரை போல விஞ்ஞானியாகி இந்த நாட்டுக்கு சேவையாற்றுவது தான் எனது லட்சியம். அதற்கு நாசா பயணம் எனக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment