19,427 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் அரசாணையிட்டு நிரந்தரம்
12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிகப் பணியிடங்களையும் நிரந்தரப்படுத்தி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்:-
முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2011–2012 கல்வி ஆண்டில் தற்காலிக பணியிடங்கள் உருவாக்கி நியமிக்கப்பட்ட உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி பாட பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தரப்படுத்தி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி தமிழக அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி ஆகிய பாடங்களில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிகப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் 2012ம் ஆண்டு பணியமர்த்தப்பட்டனர்.
கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரத்து 700 தொகுப்பூதியம் மட்டும் உயர்த்தப்பட்டதால் தற்போது ரூ.7 ஆயிரத்து 700 சம்பளம் தரப்படுகிறது. கடைசியாக ஊதியஉயர்வு தரப்பட்டு 2 ஆண்டுகள் முடிந்துவிட்டது. 16549 பகுதிநேர ஆசிரியர்களில் உயிரிழப்பு, பணிஓய்வு, பணிராஜினாமால் ஏற்பட்ட 4000 காலிப்பணியிடங்கள் போக 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். 9 கல்வி ஆண்டுகளாக தொகுப்பூதியத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது தற்காலிக பணியிடங்களில் பணிபுரிந்த 19427 ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பணியிடங்களை நிரந்தரமாக்கி நிரந்தர பணியாளர்களாக மாற்றி அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இது கடந்த 2017ல் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வி அமைச்சரால் கல்விமானியக்கோரிக்கையில் நாடே வியக்கும் அறிவிப்பாக வெளியிடப்பட்டது. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதே கூட்டத்தொடரிலே பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது என்றும், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இதனை இந்நேரத்தில் அரசாணையாக வெளியிட வேண்டும். மேலும் 19427 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப்படுத்தி அரசாணை வெளியிட்டதைபோல 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிகப் பணியிடங்களையும் நிரந்தரப்படுத்தி பணிநிரந்தரம் செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
ஜாக்டோஜியோ வேலைநிறுத்தப் போராட்ட காலங்களில் அரசின் உத்தரவுபடி பள்ளிகளை திறந்து பகுதிநேர ஆசிரியர்கள் இயக்கியதை அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment