தமிழகத்தில் சிறப்பாசிரியர்களுக்கான உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் 1,300 பேரை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
இந்தத் தேர்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். அவர்களில் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் 2018 அக். 12-ஆம் தேதி வெளியிட்டது. ஆனால், இதுவரை அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. எனவே, தங்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து சிலர் வழக்குத் தொடர்ந்தனர்
அப்போது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் வழக்கு முடிந்த பின்னர், இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளிவந்தது
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் 81 இசைப் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பிற பாடங்களான உடற்கல்வி, தையல், ஓவியம் ஆகியவற்றுக்கான தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் கூறுகையில், சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வு எழுதியவர்களில் தையல் ஆசிரியர் பணிக்கான பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இதையடுத்து சில நாள்களில் ஓவிய ஆசிரியர்களுக்கான பட்டியலும் வெளியிடப்படும். தையல், இசை, ஓவிய ஆசிரியர்களுக்கான தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் பட்டியல் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு பணி நியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெறும்.
உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு அறிவிப்பு வெளியிட்டபோது, அவர்களுக்கான கல்வித் தகுதியில் சில குழப்பங்கள் இருந்தன. எனவே மீண்டும் அவர்களுக்குச் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டு, அவர்களுக்குரிய அனுபவத்துக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பின்னர் புதிய பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், 230 தையல் ஆசிரியர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், ஒரு பணியிடத்திற்கு ஒருவர் வீதம் 230 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் ஓவிய ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியலும், அதன் பின்னர் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியலும் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment