மேற்குவங்க மாநிலம் ஆஸ்கிராம் பகுதியில் வசித்து வருபவர் சுஜித் சட்டோபாத்யாய். 76 வயதான இவர் கடந்த 2004ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றார்.
இதன் பின்னர் ஏழை மாணவிகளுக்கு தனது வீட்டிலேயே டியூஷன் எடுக்கத் தொடங்கினார். தற்போது இவரது பாடசாலையில் 350 மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களுக்கு ஆண்டுக்கட்டணம் வெறும் 2 ரூபாய் மட்டும்தான்.
இவருடைய பாடசாலையில் ஏழை, எளிய, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து பயன்பெற்று வருகின்றனர். இவரிடம் பயிற்சி பெறும் மாணவிகளில் பலர் பள்ளித் தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
காலை 6 முதல் தொடங்கும் டியூஷன் வகுப்புகள் மாலை வரை நீடிக்கின்றன.
பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துவந்து இவரிடம் பல மாணவிகள் டியூஷன் படித்து வருகின்றனர். சுஜித்சட்டோபாத்யாய் பள்ளி பாடங்களை மட்டும் கற்பிக்காமல், வரலாறு, இலக்கியம் மற்றும் மொழிப்பாடங்களை கற்பித்தும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற பிறகு, வீட்டில் இருந்தேன். அப்போது 3 மாணவிகள் என்னிடம் வந்து டியூஷன் எடுக்க முடியுமா என்று என்னிடம் கேட்டனர். நானும் சம்மதித்து, டியூஷன் எடுக்கத் தொடங்கினேன்.
பல கிலோமீட்டர் தூரம் பயணித்து வந்து என்னிடம் மாணவிகள் பாடம் கற்கத் தொடங்கினர். இப்போது எனது பாடசாலையின் பெயர் சதாய் ஃபக்கீரர் பாடசாலை என்பதாகும். ஒரே வருடத்தில், மூன்று குழந்தைகள் 350 குழந்தைகளாக வளர்ந்தனர். சில முன்னாள் மாணவர்கள் சில நேரங்களில் இங்கு வந்து வகுப்புகள் எடுப்பார்கள்.
பல மாணவர்கள் வீட்டிலிருந்து மிகவும் மோசமான நிதி நிலையுடன் வருகிறார்கள். பல குடும்பங்களில் பள்ளிக்குச் செல்லும் முதல் குழந்தைகள் இந்த குழந்தைகள். ஒரு நல்ல பள்ளிக்கு செலுத்த பணம் கூட பலரிடம் இல்லை. அதனால்தான் நான் தொடர்ந்து அவர்களுக்கு கற்பிக்க முடிவு செய்தேன். அவர்கள் தரும் 2 ரூபாய் என்பது ஒரு ஆசிரியருக்கு அவர்கள் செய்யும் மரியாதை.
நாட்டில் நல்ல கல்வி நிறுவனங்களை கட்டியெழுப்ப வேண்டும், மாணவர்களுக்கு தங்குமிடம் வழங்க வேண்டும். இதுகுறித்து நான் பலமுறை அரசாங்கத்திற்கு கடிதங்கள் அனுப்பியுள்ளேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
இங்குள்ள மாணவிகள் தரும் இந்த சிறுதொகையின் ஒருபகுதியை ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறேன்" என்றார் நெகிழ்ச்சியாக.
தன் ஓய்வுநாளை ஏழை மாணவிகளுக்காக செலவிடும் சுஜித் சட்டோபாத்யாய் ஒரு உண்மையான கல்விவள்ளல் என்று அப்பகுதி மக்கள் புகழ்ந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment