எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு: கல்லூரி வரை படித்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்: உயர்நீதிமன்றம்

Saturday, September 28, 2019




பள்ளிப் படிப்பு முதல் கல்லூரி வரை முழுமையாக தமிழ் வழியில் படித்து அதற்கான முறையான சான்றிதழ்களைப் பெற்றவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு பொருந்தும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பூமிநாதன் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2018-ஆம் ஆண்டு 320 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது. இந்தத் தேர்வில் பங்கேற்ற நான் உள்பட 3 பேர் சட்டப் படிப்பை தமிழ்வழியில் படித்தோம்.
இதனால் சிவில் நீதிபதிக்கானத் தேர்வை தமிழில் எழுதினோம். இதனால் எங்களுக்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்கவில்லை. எங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, இதுதொடர்பாக 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முடிவெடுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.வி.கார்த்திகேயன், சி.சரவணன் ஆகியோர் கொண்ட முழு அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் தமிழில் தேர்வு எழுதியதை மட்டும் ஆதாரமாக வைத்துக்கொண்டு இந்த இடஒதுக்கீட்டைப் பெற உரிமை கோர முடியாது. அதே போல தமிழ் வழியில் படித்ததற்கான உரிய சான்றிதழ்களை கல்வி நிறுவனங்களிடம் இருந்து பெறாதவர்கள் இந்த இடஒதுக்கீட்டு சலுகையை பெற முடியாது. ஒருவர் பள்ளி, கல்லூரி தேர்வுகளையும், போட்டித் தேர்வுகளையும் தமிழில் எழுதினால் மட்டுமே சலுகையைக் கோர முடியாது. தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் இருந்து தமிழ் வழியில்தான் படித்தார் என்பதற்கான சான்றிதழ்களைப் பெற்றிருந்தால் மட்டுமே இந்த இடஒதுக்கீட்டு சலுகை பொருந்தும் என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One