தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும், ஆழ்துளை கிணறுகள் இருந்தால், அவற்றின் குழிகளை ஆய்வு செய்ய, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், பயன்பாடில்லா ஆழ்துளை கிணற்றில், 2 வயது குழந்தை சுர்ஜித் விழுந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி, பொது இடங்கள், வீடுகள், தெருக்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் உள்ள, ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்து, பயன்பாட்டில் இல்லாதவற்றை மூடும்படி, மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துஉள்ளனர்.அதில், கூறியிருப்பதாவது:
* பள்ளி வளாகங்களில், தற்போது பயன்பாட்டில் உள்ள, ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பாக உள்ளனவா என, ஆய்வு செய்ய வேண்டும்
* பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், கிணறுகள், நீர் சேமிப்பு தொட்டிகள் போன்றவற்றை கண்டறிந்து, அவற்றை நிரந்தரமாக மூட, நடவடிக்கை எடுக்க வேண்டும்
* மூடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மற்றும் தொட்டிகள் உள்ள இடங்களை, சிறப்பு குறியிட்டு, தனியாக அடையாளப் படுத்த வேண்டும். அவற்றை தரை மட்டத்தில் இருந்து உயர்த்தி, பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும்
* மாணவ - மாணவியருக்கு, ஆழ்துளை கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றின் ஆபத்துகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment