எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பருவ மழைப் பாதிப்பிலிருந்து மாணவர்களைக் காத்திட விலையில்லா நல்ல தரமான மழைப் பாதுகாப்பு உடை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும்! - முனைவர் மணி கணேசன்

Tuesday, October 15, 2019


தமிழகத்தில்  தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டதை அனைவரும் உறுதி செய்துள்ளது யாவரும் அறிந்த ஒன்றாகும். மேலும், இந்த ஆண்டு பருவ மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலையாளர்கள் கணித்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவிர, அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பாண்டில் உலகத் தரத்திற்கு ஈடாக புதிய பாடப்புத்தகங்கள் விரைந்து அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. இருப்பினும், அண்மையில் முதல் பருவ விடுமுறைக்குப் பின் தொடங்கி இருக்கும் பள்ளிகளில் இரண்டாம் பருவ வகுப்புகள் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பள்ளி வேலைநாள்கள் முழுமையாக இருந்தால்கூட அனைத்துப் பாடப்பகுதிகளையும் நிறைவாக நடத்தி முடிக்க இயலாத நிலையே உள்ளது. இத்தகைய சூழலில், மழைக்கால விடுமுறைகள் மாவட்ட நிர்வாகத்தின்மூலம் அறிவிக்கப்படுவது ஒருபுறம் என்றால் மாணவர்கள் தினசரி வருகையை மழை பாதிப்பது மறுபுறம் எனலாம்.

குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, விளிம்பு நிலைக் குழந்தைகள்  மழைக்காலத்தில் பள்ளி வருவது பேரிடராக இருப்பது உண்மை. பெய்யும் மழையிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள போதிய மழைப் பாதுகாப்புப் பொருள்களாக குடைகள் மற்றும் உடைகள் வீடுகளில் இல்லாத நிலையே அதிகமுள்ளது. கிழிந்த, உடைந்த குடைகளில் தம்பி தங்கைகளோடு முக்கால்வாசி நனைந்த நிலையிலேயே பள்ளி வரும் அவலநிலை பல பள்ளிகளில் காணப்படுகிறது. உரக் கோணிப்பையைத் தலையில் கவிழ்த்துவரும் கொடுமையும் அரங்கேறி வருவது பரிதாபத்திற்குரியது. மேலும், மழைக்காலத் தொற்று மற்றும் இதர நோய்கள் தாக்கப்படுவதும் அவதியுறுவதும் படிப்புப் பாதிப்பதும் நடப்பாக இருப்பது கவலைக்குரிய ஒன்றாகும்.

இத்தகைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் கல்வி நலன் மற்றும் உடல் நலன் பேணுதல் பொருட்டு நல்ல, தரமான மழைப் பாதுகாப்பு உடைகளை (Rain Coats) அவசர அவசியம் கருதி உடன் வழங்கிட தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் இன்றியமையாதது ஆகும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One