உடல் நலத்தின் அக்கறை காட்டுவதில் பெண்கள் பின்தங்கியே இருக்கிறார்கள். வீட்டில் ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏதாவது என்றால் வீடே பதறிவிடும். ஆனால், பெண்கள் காய்ச்சல் வந்து படுத்துவிட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட யாருக்கும் தோன்றாது.
பெண்களும் கஷாயம் வைத்துக் குடித்தோ மாத்திரை போட்டுக்கொண்டு காய்ச்சலைச் சமாளித்தோ வீட்டு வேலைகளைச் செய்வார்கள். தொற்றுநோய்கள் குழந்தைகளையும் பெண்களையும் எளிதில் பாதிக்கக்கூடும் என்பதால் பெண்கள் தங்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். தற்போது டெங்குக் காய்ச்சல் பரவிவரும் சூழலில் பெண்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். டெங்குக் காய்ச்சல் பொதுவாக மழைக்காலத்தில்தான் அதிகமாகப் பரவுகிறது.
டெங்கு வைரஸைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் மழைக்காலத்தில் ஆங்காங்கே தேங்கும் நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகும். கொசுவை ஒழிப்போம் மனிதர்களின் ரத்தம்தான் ஏடிஸ் கொசுவின் உணவு. இந்தக் கொசுவின் கொடுக்கில் டெங்கு வைரஸ் இருக்கும். இதனால், நம்மைக் கடித்தவுடன் டெங்கு வைரஸ் ரத்தத்தில் கலந்து டெங்கு காய்ச்சல் உண்டாகிறது. மனிதர்கள் அதிகமுள்ள பகுதிகளில்தான் இந்தக் கொசு இருக்கும். சிலர் காய்ச்சல் வந்தால் மாத்திரை போட்டுவிட்டு எல்லாம் சரியாகிவிடும் என இருப்பார்கள். ஆனால், மழைக்காலத்தில் காய்ச்சல் வந்தால் இப்படி அசிரத்தையாக இருக்கக் கூடாது என்கிறார் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பொதுநல மருத்துவத் துறை தலைமை மருத்துவர் க.வெ.ராஜலட்சுமி.
டெங்குக் காய்ச்சல் உயிர்க்கொல்லி நோயல்ல எனக் குறிப்பிடும் அவர், டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகளை விளக்குகிறார்.
* இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் இருப்பது.
* காய்ச்சலுடன் கூடிய பசியின்மை.
* தலைசுற்றல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, மயக்கம், குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மலம் கறுப்பாக வெளியேறுதல், பல் ஈறுகளிலும் மூக்கிலும் ரத்தம் கசிதல், மூச்சடைப்பு.
* குழந்தைகள் பாக்டீரியாவால் பாதிக்கப் பட்டிருந்தால் சளி பச்சை நிறத்தில் இருக்கும். வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தால் மூக்கில் தண்ணீர்போல் வடியும். காய்ச்சல் இருக்கும்போது குழந்தைகளுக்கு மருந்து கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்கிறார் ராஜலட்சுமி. “வைரஸ் அல்லது டெங்குக் காய்ச்சல் இருந்தால் கட்டாயம் ஐந்து நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். காய்ச்சல் இருக்கும்போது குழந்தைகள் தினமும் சாப்பிடுவதைவிடக் குறைவாகச் சாப்பிட்டாலே அது வைரஸ் காய்ச்சல்தான் எனப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் அவர். டெங்குவின் பாதிப்புகள்
* ஏடிஸ் கொசுகள் பகல் நேரத்தில் மட்டும்தான் கடிக்கும்
* டெங்கு காய்ச்சல் உள்ளவர்களுக்கு ஐந்து நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இருக்கும்.
* உதடு, சருமம், நாக்கு ஆகியவை வறண்டுவிடும்.
* டெங்குக் காய்ச்சல் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும். இதனால், ரத்த ஓட்டம் சீராக இருக்காது.
* டெங்குக் காய்ச்சலைச் சரியாகக் கவனிக்காமல் விட்டால் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
* மழைக்காலத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் கட்டாயம் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
* காய்ச்சலின் போது கஞ்சி, பழச்சாறு. இளநீர், உப்பு- சர்க்கரைக் கரைசல் (ORS) போன்ற திரவ உணவை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஏடிஸ் கொசு நல்ல தண்ணீரில் உற்பத்தி ஆவதால் வீட்டில் நீரைச் சேமித்துவைக்கும் தண்ணீர்த் தொட்டி, குடம், வாளி, ஆகியவற்றை மூடிவைக்க வேண்டும்.
* வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துகொள்ள வேண்டும். “மழைக்காலத்தில் காய்ச்சல் வந்தால் மாத்திரை போட்டதும் சிலருக்கு மட்டுப்படலாம். அதற்காகக் காய்ச்சல் சரியாகிவிட்டது என நினைப்பதும் குழந்தைகள் விளையாடினால் காய்ச்சல் சரியாகிவிட்டது என்று நினைத்து மருத்துவரிடம் போகாமல் இருப்பதும் தவறு. டெங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க மேற்குறிப்பிட்ட விஷயங்களைப் பின்பற்றுவது அவசியம்” என்கிறார் மருத்துவர் ராஜலட்சுமி.
டெங்குக் காய்ச்சல் பற்றி மேலும் தகவல்கள் அறியவும் மருத்துவ உதவி பெறவும் அருகில் உள்ள பொது சுகாதார மையம் பற்றித் தெரிந்துகொள்ளவும் 9444340496, 8754448477 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இவை 24 மணி நேரமும் செயல்படும்.
No comments:
Post a Comment